தமிழகம்

“4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்” - அமித் ஷா சந்திப்புக்குப் பின் இபிஎஸ் உறுதி

செய்திப்பிரிவு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின், டெல்லியில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்படவில்லை. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார்.

          

அப்போது, கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் எண்ணிக்கை, உதிரிக் கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அமித் ஷாவிடம் பழனிசாமி விளக்கியதாகவும், பாமக, அமமுக போன்ற கட்சிகளுக்கு ஒதுக்க உள்ள தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பாக கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பின் நேற்று காலை சென்னை புறப்படுவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமித் ஷாவுடனான சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து கலந்தாலோசித்தேன். நான்கைந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், உள்துறை அமைச்சருக்கு பணிச்சுமை அதிகம்.

அதனால் நான் வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போகிறேன். நாளை (மார்ச் 21) மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வருகிறார். இன்னும் 4 நாட்களில் தொகுதி பங்கீடு எல்லாம் இறுதி செய்யப்படும். 234 தொகுதிகளும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் தான். அவரவருக்கு எங்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ, அதையெல்லாம் அமர்ந்து பேசி முடிவு செய்வோம். இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

தவெக-வுடன் நாங்களும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பேச்சுவார்த்தை நடத்தவில்லை என விஜய்யும் தெரிவித்துவிட்டார். இந்த கூட்டணிக்கு தலைமை அதிமுக. எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் அவர்களை சந்தித்துப் பேசவில்லை. அவர்களும் எங்களை சந்தித்துப் பேசவில்லை. எல்லா கட்சிகளும் அந்தந்த கூட்டணியில் சேர்ந்துவிட்டன. இனி தேர்தலை நோக்கி பயணம் செய்ய வேண்டும். அன்புமணியும், டிடிவி. தினகரனும் தமிழக அரசியல் சூழல் குறித்து கலந்து பேச டெல்லி வருகின்றனர்.

திமுக அமைக்கும் கூட்டணி மாதிரி எங்கள் கூட்டணி இல்லை. அமைதியாக, அழகாக, அற்புதமாக கூட்டணி பேசுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீடு பட்டியல் வெளியிடப்படும். எங்கள் கூட்டணியில் எந்தச் சிக்கலும் கிடையாது. எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, யார் யாருக்கு எந்தெந்த இடத்தில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அந்தந்த தொகுதியை அவர்கள் பெறுவதுதான் எங்கள் நோக்கம். அதிமுக தலைமையில் 234 தொகுதியிலும் போட்டியிடுகிறோம். 234 தொகுதியிலும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேர்தலைச் சந்திக்கிறோம்.

நாங்கள் 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி. பல தேர்தல்களை சந்தித்த கட்சி. எங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களைக் கொடுத்துள்ளோம். மத்திய அரசிடம் இருந்தும் பல திட்டங்களைப் பெற்று நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். மாநில அரசிலும் நிறைய திட்டங்களை கொடுத்திருக்கிறோம்.

ஆனால் திமுக ஆட்சியில், இந்த 5 ஆண்டுகளில் எந்த புதிய, பெரிய திட்டமும் வரவில்லை. சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. இவர்களின் ஒரே சாதனை ஊழல் செய்ததுதான். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கெனவே பிரச்சாரம் தொடங்கப்பட்டு, எக்ஸ்பிரஸ் வேகத்தில் போகிறது.

ஏற்கெனவே பிரதமர் 3 முறை தமிழகத்துக்கு வந்து மதுராந்தகம், மதுரை, திருச்சியில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றுள்ளது. இப்போது பல மாநிலங்களில் தேர்தல் அறிவித்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப தமிழகத்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, அதிமுக எம்பி-க்கள் தம்பிதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT