தமிழகம்

தொகுதிப் பங்கீடு குறித்து அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

டிடிவி தினகரன், அன்புமணி இன்று டெல்லி செல்கின்றனர்

செய்திப்பிரிவு

சென்னை: டெல்​லி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று சந்​தித்து தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் கட்​சிகளுக்கு ஒதுக்க வேண்​டிய தொகு​தி​கள் எண்​ணிக்கை குறித்து முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். இதில் தொகு​திப்பங்​கீடு இறுதி செய்​யப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதைத் தொடர்ந்​து, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், பாமக தலை​வர் அன்​புமணி ஆகியோ​ரும் இன்று டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க உள்ளனர்.

          

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் மார்ச் 30-ம் தேதி தொடங்​கு​கிறது. திமுக கூட்​ட​ணி​யில் கட்​சிகள் உடனான தொகு​திப் பங்​கீடு இறு​திக் கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. ஆனால், முதல் நபராக பிரச்​சா​ரத்தை தொடங்​கி,தேர்​தல் அறி​விப்​புக்கு முன்​ன​தாகவே 3 கட்​ட​மாக வாக்​குறு​தி​களை​யும் அறி​வித்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிதொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தையை தொடங்​காமலே இருந்​தார்.

அதி​முக​வில் கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் தொகு​திப் பங்​கீடு குறித்து பேச்​சு​வார்த்தை நடத்த கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன், தலைமை நிலை​யச் செய​லா​ளர் எஸ்​.பி.வேலுமணி, மகளிர்அணி செய​லா​ளர் பா.வளர்​மதி ஆகிய 4 பேர் கொண்ட குழுவை பழனி​சாமி அமைத்​தார். அதற்​குப் பிறகு எந்த முன்​னேற்​ற​மும் இல்​லை.

ஏற்​கெனவே மதுரை​யில் மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயலுடன் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யிலும், டெல்​லி​யில் இம்​மாதம் முதல் வாரத்​தில் அமித் ஷாவை சந்​தித்​த​போதும் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு ஒதுக்க வேண்​டிய தொகு​தி​களின் எண்​ணிக்கை குறித்து உத்​தேச​மாக மட்​டுமே விவா​திக்​கப்​பட்​டது. ‘பாஜக, அமமுக அதிக தொகு​தி​கள் கேட்​கின்​றன. அதன் காரண​மாகவே, தொகு​திப் பங்​கீட்டை பழனி​சாமி இறுதி செய்​யாமல் உள்​ளார். வேட்​புமனு தாக்​கலுக்கு இன்​னும் நாட்​கள் இருப்​ப​தால் அவசரம் காட்​டா​மல் இருக்​கிறார்’ என்​றும் கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில், வேட்​புமனு தாக்​கல் 30-ம் தேதி தொடங்க உள்​ளது. அதற்கு இன்​னும் 10 நாட்​களே இருப்​ப​தால், கடைசி நேர அவசரத்தை தவிர்க்​கும் வித​மாக,தொகு​திப் பங்​கீட்டை விரைந்து இறுதி செய்ய வேண்​டும் என்று பழனி​சாமி​யிடம் பாஜக தலைமை வலி​யுறுத்​தி​யுள்​ளது.

பியூஷ் கோயல் பயணம் ரத்து: இதன் தொடர்ச்​சி​யாக, மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று தமிழகம் வந்​து, தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி, தொகு​திப் பங்​கீட்டை இறுதி செய்​வ​தாக இருந்​தது. பியூஷ் கோயல், ஏற்​கெனவே இரு​முறை சென்​னைக்கு வந்து பழனி​சாமி​யுடன் விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார்.

கூட்​டணி கட்​சித் தலை​வர்​களை​யும் அவர் சந்​தித்​துப் பேசி​னார். இருப்​பினும், பாஜக கேட்ட தொகு​தி​களின் எண்​ணிக்​கைக்​கும், அதி​முக ஒதுக்க முன்​வந்த இடங்​களுக்​கும் இடையே உடன்​பாடு எட்​டப்​ப​டா​மல் இருந்​தது. குறிப்​பாக, பாஜக தரப்​பில் கவுர​வ​மான எண்​ணிக்​கை​யில் தொகு​தி​கள் எதிர்​பார்க்​கப்​பட்​டன. தனது கூட்​டணி கட்​சிகளை​யும் அரவணைத்​துச் செல்​லும் வகை​யில் பாஜக கூடு​தல் இடங்​களை வலி​யுறுத்தி வரு​கிறது.

குறிப்​பாக, கன்​னி​யாகுமரி, நெல்​லை, கோவை, திருப்​பூர், ஈரோடு, சேலம் மற்​றும் சென்னை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் தங்​களுக்கு செல்​வாக்​குள்ள தொகு​தி​களைக் குறி​வைத்து பாஜக களம் இறங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில், தொகு​திப் பங்​கீட்​டுச் சிக்​கலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க பாஜக மேலிடப் பொறுப்​பாளர் பியூஷ் கோயல் வரு​வ​தாக கூறப்​பட்​டது. அவர் பழனி​சாமி​யுடன் இறு​திச்​சுற்​றுப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதும் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கான தொகு​தி​கள் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், பியூஷ் கோயலின் தமிழக பயணம் கடைசி நேரத்​தில் ரத்து செய்​யப்​பட்​டது. இதற்​கிடையே, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரனும் கூடு​தல் தொகு​தி​கள் கேட்டு வரு​வ​தாக அதி​முக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. இந்த சூழலில், மத்​திய அமைச்​சர் அமித் ஷாவை சந்​தித்து தொகு​திப் பங்​கீட்டை இறுதி செய்​வதற்​காக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று காலை டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். நேற்று இரவு அமித் ஷாவை சந்​தித்​து, தொகு​திப் பங்​கீடு தொடர்​பாக தீவிர ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது, பாஜக 30 தொகு​தி​கள் கேட்ட நிலை​யில், 25 தொகு​தி​களை ஒதுக்​கு​வ​தாக பழனி​சாமி தெரி​வித்​தத​தாக கூறப்​படு​கிறது. அதே​போல, 30 கேட்ட பாமக​வுக்கு 22 தொகு​தி​கள், 10 கேட்ட அமமுக​வுக்கு 6 தொகு​தி​கள், 12 கேட்ட தமாகா​வுக்கு 3 தொகு​தி​கள் ஒதுக்​கு​வ​தாக​வும் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். பாஜக​வுக்கு கூடு​தல் தொகு​தி​கள் ஒதுக்க வாய்ப்பு இல்லை என்​ப​தில் அவர் உறு​தி​யாக இருந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

பின்​னர், தீவிர ஆலோ​சனைக்​குப் பிறகு, தொகு​திப் பங்​கீட்டை அமித் ஷா, பழனி​சாமி இரு​வரும் சுமுக​மாக இறுதி செய்ததாக தகவல் வெளியானது. ஓரிரு நாளில் இறுதியாகிறது இதன் தொடர்ச்​சி​யாக, கூட்​ட​ணிக் கட்​சிகளை அழைத்​துப் பேசி, ஓரிரு நாளில் தொகு​திப் பங்​கீட்டை இறுதி செய்ய பழனி​சாமி திட்​ட​மிட்​டுள்​ளதாகவும் கூறப்படுகிறது.

டெல்​லி​யில் அமித் ஷா உடனான சந்​திப்​பின்​போது, திமுக அமைச்​சர் கே.என்​.நேரு, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி ஆகியோர் மீதான அமலாக்​கத் துறை நடவடிக்​கை​யைத் தீவிரப்​படுத்​து​வது குறித்து பழனி​சாமி வலி​யுறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.தவெக தலை​வர் விஜய்க்கு மக்​கள் மத்​தி​யில் உள்ள செல்​வாக்​கு, தவெக உடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்​பு​கள் குறித்துபழனி​சாமி​யிடம் அமித் ஷா ஆலோ​சனை நடத்​தி​ய​தாக​வும் தகவல் வெளி​யானது.

இதற்​கிடையே, கூடு​தல் தொகு​தி​கள் கேட்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இன்று டெல்லி சென்றுஅமித் ஷாவை சந்​திக்க உள்​ளார். பாமக தலை​வர் அன்​புமணி, தமிழக பாஜக தலை​வர்​ நயி​னார்​ நாகேந்​திரன்​ ஆகியோ​ரும்​ இன்​று டெல்​லி செல்​கின்​றனர்​.

SCROLL FOR NEXT