சென்னை: லஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை பாலியல் சீண்டல், சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் 6-வது கட்டப் பிரசாரத்தில் இன்று மாலை திருப்போரூர் தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, எம்ஜிஆர் பிரதான சாலை திறந்தவெளித் திடலில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “திமுக 200 இடங்களில் வெல்லும் என்று ஸ்டாலின் பேசுகிறார். உண்மையில் அதிமுக கூட்டணியே 210 இடங்களில் வெல்லும். நான்கே முக்கால் ஆண்டு காலம் திமுக அரசு மக்களிடம் மிகுந்த வெறுப்புக்கு ஆளாகிவிட்டது. லஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை பாலியல் சீண்டல், சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை. இப்படிப்பட்ட அலங்கோல ஆட்சி அகற்றப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு டிஜிபியை கூட நியமிக்காத அரசு. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சொல்லியும், யுபிஎஸ்சி மூலம் 3 பேர் தேர்வு செய்து அனுப்பியும் இதுவரை நியமிக்கவில்லை, அதற்கு காரணம் இவர்களுக்கு ஜால்ரா போடும் டிஜிபி கிடைக்கவில்லை. திறமையான டிஜிபி வந்தால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.
பொறுப்பு டிஜிபி விடுமுறையில் சென்றால், அதற்கும் பொறுப்பு டிஜிபி நியமித்த பொறுப்பில்லாத முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி அலங்கோல ஆட்சியைப் பார்க்க முடியவில்லை. முறையாக நிரந்தர டிஜிபி நியமித்தால் தான் மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். இவர்களுக்கு வேண்டப்பட்ட டிஜிபி நியமிக்க வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.
சமூகநலத்துறை அமைச்சர் தூத்துக்குடியில் ஒரு கருத்தை சொல்கிறார், 6,999 போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது என்றும் அதற்காக 104 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டதாக பெருமையாகப் பேசுகிறார், வெட்கமாக இல்லையா? 6,999 சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி..? வெட்கமில்லாமல் பேசுகிறார்கள்.
இந்த ஆட்சியில் எல்லாமே ஊழல். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, பெரும்பாலான பார்களை திமுகவினர் எடுத்துக்கொண்டனர். அந்த பார்களில் முறைகேடாக மதுபானம் விற்பது வேறு கதை. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5,400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். மேலிடத்துக்கு அனுப்புகிறார்கள். மேலிடம் யார் என்றால், ஸ்டாலின் குடும்பம் தான். இந்த அரசு தொடர வேண்டுமா? ஊழல் அரசை அகற்றுவீர்களா?
நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், 30 ஆயிரம் கோடி ரூபாயை உதயநிதியும், சபரீசனும் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசினார். அதற்கு இதுவரை ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சி துறை காலிப்பணியிடம் நிரப்புவதில் 800 கோடி ரூபாய் ஊழல். இ.டி கண்டுபிடித்து எஃப்.ஐ.ஆர் போடச்சொல்லியும் போடவில்லை, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாலின் வெளிநாடுக்கு முதலீடு செய்வதற்குப் போனார். அண்மையில் ஜெர்மனி செல்லும்போது 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டு 10 லட்சத்து 62 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 32 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்து அதில் 77% ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார். அப்படியென்றால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும், கிடைத்ததா? ஒரு ஒப்பந்தம் போட்டால் நிலம் தேர்வு, அனுமதி எல்லாம் முடிய 3 முதல் 5 ஆண்டுகாலம் பிடிக்கும். ஆனால் முதல்வர் மக்களை ஏமாற்ற இப்படி பச்சை பொய் சொல்கிறார்.
அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, அதில் 72% ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் இயங்கிவருகிறது. ஸ்டாலின் பேசும் பெருமைக்கு நாம் தான் காரணம், நாம் விதை போட்டோம், செடி முளைத்தது, மரமாச்சு, இப்போது பூ பூத்து காயாகி பழத்தை இவர்கள் பறிக்கிறார்கள். இவர்கள் கொண்டுவந்த திட்டங்களால் வேலை கிடைக்கவில்லை, அதிமுக ஆட்சி மூலமாகத்தான் தொழிற்சாலைகள் வந்தது. பொருளாதாரம் முன்னிலைக்கு வந்தது.
சட்டமன்றத்தில், பேட்டியில், வெள்ளை அறிக்கை கேட்டேன், தொழில்துறை அமைச்சரிடம் கேட்டேன். ஆனால் அவர் வெள்ளை பேப்பரை காட்டுகிறார், உண்மை அதுதான் ஒன்றுமே நடக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறார். மக்கள் கேட்கின்ற கேள்வியின் அடிப்படையில், எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் கேட்கிறோம். பதில் சொல்ல வேண்டியது ஆளும்கட்சியின் கடமை. ஆனால் பொய் சொல்வதே அவர்களின் குறிக்கோள். இந்தியாவில் முதன்மை முதல்வர் ஸ்டாலினாம், எதில் என்றால் கடன் வாங்குவதில் தான் முதன்மை. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலம். அந்த சாதனை தான் முதல்வர் செய்திருக்கிறார். மக்களை கடனாளியாக்கியதுதான் பெருமை.
பிரதமர் மோடி மேட் இன் இந்தியா திட்டம் கொண்டுவந்தார். மெட்ரோ ரயில் திட்டம். இந்தியாவிலேயே ஒரே திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி எங்கும் கொடுக்கவில்லை சென்னைக்கு மட்டும்தான் அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டுவந்தோம். சோழிங்கநல்லூர் தொகுதியிலும் மெட்ரோ திட்டம் வருகிறது, அப்போது மிகப்பெரிய வளர்ச்சி பெறும்.
அதிமுக ஆட்சியில் பல சாதனைகள் படைத்தோம். ஒரே ஆண்டில் 12 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். இதன் பெருமை பிரதமர் மோடிக்கு சேரும். திமுகவினால் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடிந்ததா? அதுக்கு தில்லு திராணி வேண்டும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசோடு இணக்கமாக இருந்து தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொண்டுவந்தோம். 2011ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, 100-க்கு 34 பேர்தான் உயர்கல்வி படித்தனர், கல்வியில் புரட்சி மறுமலர்ச்சி ஏற்படுத்தியதன் விளைவாக, 2019-20ம் ஆண்டில் 100க்கு 52 பேர் உயர்கல்வி படிக்கும் நிலையை அதிமுக அரசு உருவாக்கியது. இது அதிமுகவின் சாதனை.
ஸ்டாலின் அவர்களே எனக்கு சேலஞ்ச் செய்தீர்கள். நான் கேட்கிறேன். இப்படி ஏதாவது ஒரு திட்டம் கொண்டுவந்தீர்களா? ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் உயர்கல்வி படிக்கும் சூழல் உருவாக்கினோம். அம்பேத்கர் சட்டக்கல்லூரி இந்த தொகுதியில் தான் கட்டிக்கொடுத்தோம். நல்ல சிகிச்சை கொடுக்க அம்மா மினிகிளினிக் கொண்டுவந்தோம். அதையும் மூடிவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும். மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் 3 லட்சம் பேருக்கு கொடுத்தோம், பாரதப் பிரதமர் தான் தொடங்கிவைத்தார். இந்த ஆட்சியில் அதையும் கைவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியமாக கொடுக்கப்படும். தாலிக்குத் தங்கம், திருமண உதவித்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது, அதிமுக ஆட்சி அமைந்ததும் இரண்டு திட்டமும் தொடரும். திருமண உதவித் திட்டத்தை நிறைவேற்றும்போது கூடுதலாக மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலையும், மணமகனுக்கு பட்டுவேட்டியும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஏழை, விவசாயத் தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.
ஸ்டாலின் நிதி இல்லை என்கிறார். ஆனால், கார் பந்தயம் நடத்த, எழுதாத பேனா வைக்க நிதி இருக்கிறது. இது, யாருடைய பணம் வரிப்பணம்..? எழுதாத பேனாவை உங்க அப்பா நினைவிடத்தில் வையுங்கள். அதற்கு மக்கள் பணம் 82 கோடி ரூபாய் செலவு செய்யவேண்டுமா? இப்படி ஊதாரித்தனமாக செலவு செய்யும் அரசு தேவையா? திட்டத்துக்கு பணம் இல்லை என்பதால் பல திட்டம் முடங்கிவிட்டது. இனி ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்துவிட்டது. அதனால் புதிய திட்டம் தொடங்கி அடிக்கல் நாட்டுகிறார்கள். இதுக்கெல்லாம் நிதி எங்கே ஒதுக்கினீர்கள்? மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறவே அடிக்கல் நாட்டுகிறார்கள். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றுவேன் என்றார்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வேன் என்றார்கள், 10 நாட்களாகப் போராடுகிறார்கள். அவர்களை கைது செய்து சித்ரவதை செய்கிறார்கள். ஏன் வாக்குறுதி கொடுத்தீர்கள்..? வாக்குகளை வாங்க வாக்குறுதி கொடுத்ததால், ஆட்சியில் வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்வேன் என்று சொன்னதைச் செய்யவில்லை. தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது.
ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. நாட்டு மக்கள் அத்தனை பேரும் உங்கள் ஆட்சி மீது வெறுப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.