சென்னை: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி என்னை திட்டமிட்டு அவதூறாக பேசிகொண்டிருக்கிறார்கள். நான் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய போது, “எனது 51 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பொதுவெளியில் நான் யாரையும் விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி என்னை திட்டமிட்டு அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அதற்கு தகுந்த பதிலடி உடனுக்குடன் கொடுப்பேன். கரோனா காலகட்டத்தில் கூட நான் 32 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள், சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், பல தரப்பட்ட தொழில் செய்கின்ற மக்களையும் அழைத்து அவர்களிடம் கருத்துகளை கேட்டேன். துணிச்சலோடு சென்ற நான் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை, மக்களைப் பற்றி தான் கவலைப் பட்டேன்.
உங்களைப் போன்று போட்டோஷூட் நடத்தி பத்திரிகைகளில் விளம்பரத்தைத் தேடவில்லை. மக்களுக்காக உழைத்தேன் அதனால்தான் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் தற்போதும் வர்ணிக்கிறார்கள். மழை பெய்தால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் மழை நீர் தங்காது என உதயநிதி வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது. அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா?
கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் ஒருவர் அமைச்சராக முடியும், துணை முதல்வர் ஆக முடியும், அதுக்கு மேல் உயர்ந்த பதவிகளில் அதிகாரத்துக்கு வர முடியும். ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. தலைமைக்கு உண்மையாக இருந்தால் , பொதுச்செயலாளராக கூட ஆக முடியும். சாதாரண தொண்டன் கூட உழைத்தால் முதல்வராக முடியும். அப்படியான கட்டமைப்பு உள்ள இயக்கம் அதிமுக.
திமுக கட்சி இல்லை. திமுக என்றால் கருணாநிதி குடும்பம்தான். மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின். கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. விலைவாசியை குறைக்க இந்த ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்கட்டணம் உயர்வு, கடுமையான வரி உயர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடன் வாங்குவதில் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி, மக்களை கடன்காரர்கள் ஆக்கிவிட்டுள்ளனர். நான் முதல்வராக வந்தால், அம்மா உணவகம் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” இவ்வாறு அவர் பேசினார்.