எம்ஜிஆர், ஜெயலலிதாவை கேலி பேசினார்கள். எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? தனிப்பட்ட விமர்சனம் செய்தால் அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் தருவோம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
அதிமுக கூட்டணி சார்பில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நேற்று மாலை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: முதல்வராக ஸ்டாலின் செய்யும் தவறுகளை நான் விமர்சிக்கிறேன். ஆனால் அவர் அரசியல் ரீதியாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் இப்போது தான் டீ கடைக்கு போவார், நடைப்பயிற்சிக்கு போவார். மக்கள் ஓட்டுப் போட்டு அவரை முதல்வராக்கியதற்கு இந்த காட்சிகளை பார்த்தது தான் மிச்சம். மறைந்த தலைவர்களை நான் கொச்சைப்படுத்துவதாக ஸ்டாலின் கூறுகிறார்.
திமுக எம்.பி.திருச்சி சிவா, காமராஜரை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். அவரை கண்டிக்க முடிந்ததா? எம்ஜிஆர், ஜெயலலிதாவை கேலி பேசினார்கள். எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? தனிப்பட்ட விமர்சனம் செய்தால் அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் தருவோம்.
திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளில் கிட்னி முறைகேடு நடந்துள்ளது. கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தண்டனை வழங்க வேண்டும். உங்கள் கனவைச் சொல்லுங்கள் என்று மக்களிடம் பெறப்பட்ட ஆதார், செல்போன் எண்களை திமுகவுக்கு தேர்தல் பணியாற்றும் ஒரு அமைப்புக்கு கொடுத்து தேர்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.
மக்களின் தரவுகளை அரசாங்கம் தவறாக பயன்படுத்தலாமா? அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை 3 முறை அறிக்கை சமர்ப்பித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.