கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் உப்பளம் தொகுதியில் போட்டியிடும் மாநில செயலாளர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் காந்தி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் பேசியதாவது: மாநிலத்தில் ஒரு கட்சியும், மத்தியில் ஒரு கட்சியும் ஆட்சி செய்தால், மாநிலத்துக்கு தேவையான திட்டங்களும் கிடைக்காது. நிதியும் கிடைக்காது. ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் இருந்தால் தான் இலக்கை அடைய முடியும். அந்த அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்திருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் இங்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார். தமிழகத்தில் கொள்ளையடித்தது போதாது என்று இங்கும் கொள்ளையடிக்கப் பார்க்கிறார். தமிழகத்தில்கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் நடக்கிறது. டாஸ்மாக்கில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடிக்கு ஊழல் செய்துள்ளனர். புதுச்சேரியில் மதுபான விற்பனை அதிகமாக இருக்கிறது. அது ஸ்டாலினுக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருக்கிறது.
கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக. மத்தியில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் கோடி கொள்ளையடித்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே உலுக்கி விட்டது. உலகளவில் கூட இந்த அளவுக்கு ஊழல் நடக்கவில்லை. நாடு முழுவதும் நம்மை தலைகுனிய வைத்த கட்சி திமுக. இவ்வாறு அவர் பேசினார்.
பிரேமலதாவுக்கு பதில்: மாநிலங்களவை எம்.பி. பதவியை தேமுதிகவுக்கு ஒப்பந்தப்படி அதிமுக கொடுக்கவில்லை என்று பிரேமலதா கூறியதற்கு பழனிசாமி பதிலளித்துள்ளார். நெய்வேலி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பழனிசாமி, “திமுகவை விஜய்காந்த் கடுமையாக எதிர்த்தார். திமுகவை கடுமையாக எதிர்த்த கட்சி தேமுதிக. ஆனால், இன்று நம்மைப் பார்த்து மாநிலங்களவை பதவியை தேமுதிகவுக்கு கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
2026-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டால் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படும் என்று நான் தெளிவாகச் சொன்னேன். கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டே அவர் முன்னிலையில் விஜய்காந்த்தை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சித்தார். அப்படிப்பட்ட திமுகவுடன் ஏதோ காரணங்களுக்காக இன்று தேமுதிக கூட்டணி அமைத்திருக்கிறீர்கள். அது உங்கள் சொந்த விஷயம். அதற்குள் நான் செல்லவில்லை’’ என்றார்.