தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டணத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.
தாராபுரம்: இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசுக்கு கடிவாளமாக அமையும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். தளவாய்பட்டணம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர் குதிரைபேரத்தின் மூலமாக வேறு கட்சிக்கு சென்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதற்கு உழைத்த மக்களை மதிக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினரான பின்னர் மாற்றுக்கட்சிக்கு சென்றதை மன்னிக்க முடியுமா? ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்தது தூய சக்தி இல்லை. திருட்டு சக்தி.
பொதுக்கூட்ட மேடையில் அந்த அம்மா அழுவது என்ன நடிப்பு. இதில், முதல்வர் விஜய்யே தோற்றுவிட்டார். முகத்தைக் காட்டினால் வாக்கு விழும் என்று சொன்னவர் வரும் 4-ம் தேதி தாராபுரம் பகுதிக்கு மீண்டும் வருகிறார். கிராமம் கிராமமாக சென்றாலும் அவருக்கு வாக்கு கிடைக்காது. இனி மக்கள் உங்களின் நடிப்பைக் கண்டு ஏமாற மாட்டார்கள். தவெக அரசுக்கு கடிவாளம் போடுவதாக இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அமையும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 கொலைகள் நிகழ்ந்துள்ளன. போதைப் பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
திமுக, அதிமுக கூட்டணி என்று யாரோ எழுதிக் கொடுத்ததை முதல்வர் பேசியுள்ளார். வெற்றி வாய்ப்பு இல்லாதபோதுதான் கட்சி தாவும் எட்டப்பர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, தாராபுரம் அமராவதி சிலை, பூக்கடை வீதி, அண்ணாசிலை வழியாக காவல் நிலையம் வரை ரோடு ஷோ சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.