சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் தனித்தனியாக பேரவைத் தலைவரை சந்தித்து உரிமை கோரியுள்ள நிலையில், அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சசிகலா தரப்பும் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.வி.சண்முகம், வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்து ஒரு அணியை உருவாக்கினர்.
சட்டப்பேரவையில் அதிமுக குழு தலைவராக எஸ்.பி. வேலுமணியையும் தேர்வு செய்தனர். இதற்கிடையே, பழனிசாமியை சட்டப்பேரவை குழுத் தலைவராகத் தேர்வு செய்து அவரது தரப்பினர், தற்காலிக பேரவைத் தலைவராக இருந்த கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக சண்முகம் தரப்பினர் வாக்களித்தனர். இதையடுத்து வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து பழனிசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையை சண்முகம் தரப்பு கைப்பற்ற முயற்சிப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம்,‘‘அதிமுக தலைமை அலுவல கத்தை கோயிலாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம். சட்டப்படி அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் நாங்கள் என்பதை நிரூபித்த பிறகுதான் அங்கே எங்கள் கால்கள் பதியும்’’ என்றார்.
இதற்கிடையே பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிசாமியின் வீட்டில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களான தளவாய் சுந்தரம், அக்ரிகிருஷ்ணமூர்த்திஆகியோர் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்தனர்.
அப்போது, ‘‘அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டதைத்தான் அங்கீகரிக்க வேண்டும்.சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’' என கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் பேரவைத் தலைவரை சந்தித்து, ‘‘எங்கள் தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக வேலுமணியும், கொறடாவாக விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதை அங்கீகரிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தனர். பிறகு செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறும்போது, ‘‘சட்டப்பேரவையில் பெரும் பான்மை ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்கள்தான் சட்டப்பேரவைத் தலைவராகவும், கொறடாவாகவும் இருக்க வேண்டும்.
தற்போது எங்கள் தரப்பில் இருக்கும் 25 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றார். இதற்கிடையே ஆளுநரை சந்திப்பதற்கான முயற்சியில் பழனிசாமி தரப்பு ஈடுபட்டு வருகிறது.
அப்போது, ‘தவெக ஆட்சி அமைப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் மனு அளிக்கதிட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வேலைகளில் சசிகலா தரப்பில் காய்கள்நகர்த்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.