சென்னை: ‘உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும்’ என அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பணிகள் குறித்தும் திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தஅதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: தவெக வெற்றி என்பது ஒரு விபத்து. திமுக மட்டும்தான் நமது எதிரி என தவறாகக் கணித்து விட்டோம். கடந்த சட்டப்பேரவைதேர்தலில் உங்கள் மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில் சிறப்பாகவே வெற்றியை பெற்றுகொடுத்திருக்கிறீர்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து தீவிர கட்சிப் பணியாற்றுங்கள். இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் 100 சதவீதம் வெற்றி பெறும் வகையில் உங்கள் பணி இருக்க வேண்டும்.
தொண்டர்கள் எல்லோரும் நம்முடன்தான் இருக்கின்றனர்.பேராசை பிடித்தவர்கள், துரோகிகள்தான் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். அதிமுகவில் கிளைச்செயலாளர் நிலையில் வாழ்க்கையைத் தொடங்கி, பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறேன். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு, அதிமுகவில் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். அதற்கு நானே உதாரணம்.இது தொண்டர்களின் கட்சி. கட்சிக்காக உழைக்கும் தொண்டனுக்கு உரிய பதவி வந்துசேரும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப்பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.