செங்கோட்டையன் எந்தக் கட்சியில் சேர்ந்தால் எங்களுக்கு என்ன? ” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவில் சமீபத்தில் இணைந்த ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி திருமண விழா மதுரையில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி நேற்று மதுரை வந்தார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தநிலையில் பழனிசாமி மதுரை வந்ததால், அவரை பார்க்க ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டனர். மதுரை மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
திருமண விழாவுக்கு வந்த பழனிசாமியிடம் செய்தியாளர்கள், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அதை அவரிடமே கேளுங்கள். அவர் எந்தக் கட்சியில் சேர்ந்தால் எங்களுக்கு என்ன? அவர் அதிமுகவில் இல்லை. அதனால், அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை” என்று காட்டமாக பதில் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ‘நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன், தான் என்று தண்டித்து விடுவார், இறைவன் கண்காணித்து கொண்டிருக்கிறார்’ என்று மறைமுகமாக உங்களை செங்கோட்டையன் குற்றம் சொல்லியிருக்கிறாரா?’ என்று கேட்டனர். அதற்கு, அவர், “ஒருவர் கருத்தில் மற்றொருவர் தலையிட முடியாது. மேலும், ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதால் அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை, ” என்று கூறி சென்றார்.