சென்னை: பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நிலத்தை ஒட்டிய பகுதியில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நிலத்தின் அருகே பிரிகேட் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முந்தைய திமுக ஆட்சியில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் அனுமதி வழங்கியிருந்தன.
இதை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பிலும், அதிமுக தரப்பிலும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சதுப்பு நிலம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்த ஒரு கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும் பிரிகேட் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் கடந்த ஜூன் 18-ம் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சிஎம்டிஏ தரப்பில் வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து பிரிகேட் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தங்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யும் முன்பாக தங்களது தரப்பில் எந்தவொரு கருத்தையும் கோராமல், அதிகாரிகள் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ஷபீக், இது தொடர்பாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் பதில் அளிக்க உத்தரவி்ட்டு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.