தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் யாராக இருந்தாலும், அவர்களின் வெற்றியை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று நேற்று நடந்த நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதில், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தங்களின் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 2,187 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். தேர்தல் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் பழனிசாமி நேர்காணல் செய்தார்.
முதல் நாளான நேற்று காலை சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் நடைபெற்றது. பிற்பகலில் நாமக்கல், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு, நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.
ஒவ்வொரு தொகுதிக்கும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்த அனைவரையும் ஒன்றாக சந்தித்து பழனிசாமி நேர்காணல் செய்தார். கட்சி வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டது, முன்னின்று நடத்திய போராட்டங்கள், திமுக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி, கைதாகி சிறை சென்ற விவரங்கள், தொகுதி மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, வெற்றிக்கான வாய்ப்பு ஆகியவை குறித்து நேர்காணலில் பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:
கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளர் அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர் என யாராக இருந்தாலும், அவர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பத்தாயிரத்துக்கும் அதிகமான விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருப்பதன் மூலம் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி தான் என்பது உறுதியாகியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தங்களின் தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், அவர்களின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும். உட்கட்சி பூசல் இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றியை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.