திண்டுக்கல்லில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவன உரிமையாளர் ராஜசேகர் வீடு.

 
தமிழகம்

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏர்.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் அருகே மதுரை சாலையில் இயங்கி வருகிறது ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் இங்கிருந்து பால் மற்றும் பால் பொருட்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிறுவனம் ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் விநியோகம் செய்ய டெண்டர் எடுத்திருந்தது. தொடர்ந்து டேங்கர் லாரிகளில் நெய் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல்லில் ஏ.ஆர்.நிறுவனத்தில் ஆந்திராவை சேர்ந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸார் கடந்த ஓராண்டுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு ஆந்திர மாநில நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவன உரிமையாளர் ராஜசேகர் நீதிமன்றத்தில் ஆஜராகியும் வருகிறார். ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம், வேறு ஒரு நிறுவனத்திடம் இருந்து நெய் பெற்று திருப்பதிக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் திடீரென ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ராஜசேகர் வீடு ஆகிய இரண்டு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 12 பேர் இரண்டு குழுக்களாக சென்று சோதனை நடத்தினர். சோதனை இரவு வரை தொடர்ந்தது.

SCROLL FOR NEXT