முகமது தன்ஜீர்
சென்னை: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த தன்வீர் அகமது (37), சென்னை பெரியமேட்டில் அலுமினிய ஸ்கிராப் தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் அதே ஊரைச் சேர்ந்த முகமது தன்ஜீர் (25) என்பவர் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 24-ம் தேதி, கோயம்பேட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் ரூ.14 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனை வானகரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்படைக்குமாறு தன்ஜீரை உரிமையாளர் தன்வீர் அகமது அனுப்பிவைத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட தன்ஜீர், நீண்ட நேரமாகியும் அதை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து உரிமையாளர் கேட்டபோது, “நான் ஆட்டோவில் வந்தபோது நெற்குன்றம் அருகே போக்குவரத்து போலீஸார் வழிமறித்து ரூ.14 லட்சத்தையும், எனது செல்போனையும் பிடுங்கிக்கொண்டனர்.
பிறகு என்னை மதுரவாயல் பைபாஸில் இறக்கிவிட்டு, பணத்தைக் காவல் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறிச் சென்றுவிட்டனர்” எனப் பதற்றத்துடன் கூறியுள்ளார்.
தன்வீர் அகமது உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்துக்குச் சென்று இதுகுறித்து விசாரித்தார். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பகுதியில் போலீஸார் யாரும் சோதனையில் ஈடுபடவில்லை என்பதும், அதுபோன்ற பறிமுதல் நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், தன்வீர் அகமது அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, போலீஸார் மறித்ததாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் பொய் என்பது உறுதியானது.
இதையடுத்து, முகமது தன்ஜீரிடம் போலீஸார் தங்களது பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். முதலில் மழுப்பிய தன்ஜீர், பின்னர் போலீஸாரின் தீவிர விசாரணையில் தான் ஆடிய நாடகத்தை ஒப்புக்கொண்டார்.
தன்ஜீர் திருடிய ரூ.14 லட்சத்தையும் பொன்னேரியில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
உடனடியாக விரைந்து சென்ற போலீஸார், மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை மீட்டனர். தொடர்ந்து முகமது தன்ஜீரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.