அமைச்சர் ரமேஷ்
சென்னை: கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தனது மின்னஞ்சலில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலும் அமைச்சர் ரமேஷ் தீவிர ஆய்வு மேற்கொண்டு, லஞ்ச ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி தரிசனத்துக்காக அமைச்சரிடமே ஊழியர்கள் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கமுயன்ற சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதேபோல, சமயபுரம் மாரியம்மன் கோயில், திருநெல்வேலி சொரிமுத்து அய்யனார் கோயில் என பல இடங்களிலும் முறைகேடுகளைத் தடுத்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக தனக்கு புகார் அளிக்கும் வகையில் புதிய மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஏதேனும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், கோயில் திருப்பணிகள் மற்றும் கோயில் தொடர்பான வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்கள் நடைபெறுவதாக அறிந்தால், minister_hrce@tn.gov.in எனும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம்.
தகுந்த விளக்கம், ஆதாரங்களுடன் புகார்களை தெரிவியுங்கள். இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை நானும், எனது அலுவலகமும் நேரடியாக மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொதுப்பணித் துறை தொடர்பான புகார்களை தெரிவிக்க ஜி-மெயில் முகவரியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் வெளியிட்டார். தனியார் நிறுவன மின்னஞ்சலைப் பயன்படுத்துவது குறித்து பலரும் விமர்சித்த நிலையில், அமைச்சர் ரமேஷ் தற்போது, அரசு டொமைனில் உருவாக்கப்பட்ட இ-மெயில் முகவரியை வழங்கியுள்ளார்.