கேங்க்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வலியுறுத்தி, மின்வாரிய ஊழியர்கள், சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமையகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |படம்: ம.பிரபு |
சென்னை: கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, மின்வாரிய கேங்மேன்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், ஒரே வேலைக்கு 2 பதவி என்ற ஏற்றத் தாழ்வுகளை களைந்து, கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
அனைத்து கேங்மேன் பணியாளர்களையும் உடனடியாக கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். 100 சதவீதம் விருப்ப ஊர் மாறுதல் உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட கேங்மேன்கள் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில அமைப்பாளர் லிங்கேஸ்வரன், “நான்கரை ஆண்டு களாக கேங்மேன் பணியாளர்களாக இருந்து வருகிறோம். 2 ஆண்டு பயிற்சி காலத்தில் ரூ.15 ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்பட்டது.
அதன் பின்னர் ஊதியமாக ரூ.16,500 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால், வாழ்வாதாரம் பெரும் சிக்கலாக இருக்கிறது. கேங்மேன் என்ற பதவியை நீக்கி கள உதவியாளர் பதவியை அனைவருக்கும் வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளாக எங்கள் கோரிக்கை முன் வைத்தும் இந்த அரசும், மின்வாரியமும் கண்டு கொள்ளவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை இங்கே தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என தெரிவித்தார்.