சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் மற்றும் தயார் நிலைகுறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தியது.
தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான தேர்தல் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேசிய அளவில் 1,444 அதிகாரிகள், 714 பொது பார்வையாளர்கள், 233 காவல் பார்வையாளர்கள், 497 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர்கள் மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் சஞ்சய் குமார், பானு பிரகாஷ் யெத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் உள்ளிட்டோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை தலைமை தேர்தல் ஆணையர் ஜியானேஷ் குமார் நியமித்துள்ளார்.
அதன்படி, இக்குழு ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் ஆய்வு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து, இக்குழு தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தது. இக்குழுவினர், மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில், மத்திய அரசு துறைகளான வருமான வரித்துறை, சுங்கத்துறை, ரயில்வே, சிஆர்பிஎஃப் உள்ளிட்ட துணை ராணுவப் படைப்பிரிவுகள், அஞ்சல் துறை, சிவில் விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர்.
இதில் தலைமை தேர்தல் அதிகாரியிடம், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு நிலை மற்றும் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முக்கிய நடவடிக்கைகள்: தொடர்ந்து மத்திய அரசின் மற்ற துறையினருடன் தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்த அந்தந்த துறைகளின் பங்களிப்பு வழங்குதல், அதற்குதேவையான அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்குதல், செலவினங்களை கண்காணிக்க வருமான வரித்துறையின் தயார்நிலை, தேர்தல் பணியாளர்களுக்கு இணைய வழியில் வாக்குச்சாவடி பணி ஒதுக்குவது, வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களை இணையகுலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்புவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள், தற்போது தயார் நிலையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேவைப்படும்
இயந்திரங்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட தேவையான துணை ராணுவப்படை கம்பெனிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக் கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய துணை தேர்தல் ஆணையர்கள், இந்த தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடத்தவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை தடுக்கவும் ஒத்துழைப்பு அளிக்குமாறு பல்வேறு துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் தயார் நிலை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசிக்க உள்ளனர். இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய தொகுதிகள், ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தலை அசம்பாவிதங்கள் இன்றி, அமைதியாக நடத்த எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.