தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வர், அமைச்சர்களின் படங்கள் அகற்றப்பட்டன. படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

தேர்தல் நடத்தை விதிகள் அமல்: 1,872 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் நேற்று மாலை முதல் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​துள்​ளன. 1,872 பறக்​கும்​படை, கண்​காணிப்​புக் குழுக்​கள் சோதனையை தொடங்​கி​யுள்​ளன.

தமிழக சட்​டப்​பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழு​வதும் தேர்​தல் நடத்தை விதி​கள் உடனடியாக அமலுக்கு வந்​துள்​ளன.

          

மாநிலம் முழு​வதும், தலை​வர்​களின் சிலைகள் நேற்று மாலை​யில் இருந்தே துணி​யால் மறைக்​கும் பணி தொடங்​கப்​பட்​டது. அரசி​யல் சுவர் விளம்​பரங்​களும் அழிக்​கப்​பட்டு வரு​கின்​றன. நகர்ப்​புறங்​களில் பேருந்து நிறுத்​தங்​களில் உள்ள விளம்பர போர்​டு​களில் இடம்​பெற்​றிருந்த அரசின் சாதனை விளம்​பரங்​கள் அகற்​றப்​பட்​டன.

தலை​மைச் செயல​கத்​தில் அரசின் சாதனை விளம்​பரங்​கள் அகற்​றப்​பட்​டன. அமைச்​சர்​களின் அறை​களை மூடி சீல் வைக்​கப்​பட்​டது. மேலும் எம்​எல்ஏ, எம்பி அலு​வல​கங்​கள், மேயர், துணை மேயர், நகராட்​சித் தலை​வர், துணைத் தலை​வர், ஊராட்சி ஒன்​றி​யத் தலை​வர், துணைத் தலை​வர் அறை​களும், வார்டு கவுன்​சிலர் அறை​களும் மூடி சீல் வைக்​கப்​பட்​டன. அவர்​களின் அரசு வாக​னங்​கள் தேர்​தல் பணிக்கு மாற்​றப்​பட்​டன.

அனைத்து மாவட்​டங்​களி​லும், ஒவ்​வொரு சட்​டப்​பேர​வைத் தொகு​திக்​கும் தலா 3 பறக்​கும் படைகள், 3 நிலை​யான கண்​காணிப்​புக் குழுக்​கள், 2 வீடியோ கண்​காணிப்​புக்குழுக்​கள் நியமிக்​கப்​பட்டு கண்​காணிப்​புப் பணி​களை மேற்​கொள்ள அனுப்​பிவைக்​கப்​பட்​டுள்​ளன. பறக்​கும் படை மற்​றும் நிலை​யான கண்​காணிப்​புக் குழு தினசரி 3 சுழற்சி முறை​யிலும், வீடியோ கண்​காணிப்​புக் குழு தினசரி 2 சுழற்சி முறை​யிலும் தனது பணியை மேற்​கொள்​ளும். தேர்​தல் நடத்தை விதி​முறை​களை மீறு​தல் தொடர்​பான அனைத்து புகார்​களை​யும் பறக்​கும் படை கவனிக்​கும்.

நிலை​யான கண்​காணிப்​புக் குழு, மாவட்ட எல்லை அல்​லது வேறு ஏதேனும் இடத்​தின் எல்​லைகளில் சோதனைச் சாவடி அமைத்து பணம் அல்​லது லஞ்​சம் பொருட்​கள் கொண்டு செல்​லப்​படு​கிறதா என சோதனை மேற்​கொள்​ளும். வீடியோ கண்​காணிப்​புக் குழு, அனு​மதி பெற்ற பொதுக்​கூட்​டம், பிரச்​சா​ரம், பேரணி​களை வீடியோ பதிவு செய்​யும். தமிழகம் முழு​வதும் 24 மணி நேர​மும் சுழற்சி முறை​யில் 1,872 பறக்​கும் படை, கண்​காணிப்​புக் குழுக்​கள் சோதனையைத் தொடங்​கி​யுள்​ளன.

தமிழகத்​தில் 75,032 வாக்​குச்​சாவடிகள் உள்​ளன. இவற்​றில் 44,065 ஊரகப் பகு​தி​களி​லும், 30,967 நகர்ப்​புறங்​களி​லும் உள்​ளன. ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் சராசரி​யாக 756 வாக்​காளர்​கள் முதல் 1200 வாக்​காளர்​களுக்கு மிகாமல் உள்​ளனர். இந்த தேர்​தலில் மாற்​றுத் திற​னாளி​கள் மட்​டுமே நடத்​தும் 47 வாக்​குச்​சாவடிகள், மகளிர் மட்​டுமே நடத்​தும் 258 வாக்​குச்​சாவடிகள், 265 மாதிரி வாக்​குச்​சாவடிகளும் அமைக்​கப்பட உள்​ளன.

இந்த தேர்​தலில் 5.67 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர். இவர்​களில் மாற்​றுத் திற​னாளி​கள் 4.63 லட்​சம் பேர், 85 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​கள் 4 லட்​சம் பேர், 100 வயதுக்கு மேற்​பட்ட வாக்​காளர்​கள் 2530 பேர், பாது​காப்​புப் படை​யில் 67,056 பேர் உள்​ளனர். மொத்த வாக்​காளர்​களில் 18 முதல் 19 வயதுக்கு உட்​பட்​டோர் 12.5 லட்​சம் பேர், 20 முதல் 29 வயது வரை 1.05 கோடி பேர் உள்​ளனர்​.

SCROLL FOR NEXT