கரூரில் அகற்றப்பட்ட தேர்தல் பணிமனை. | படம்: க.ராதாகிருஷ்ணன் |
கரூர்: கரூரில் 2 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனைகள் அகற்றப்பட்டுள்ளன. கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு காலி இடங்களில் தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வந்தன.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கரூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் மனிதபட்டிகள் அமைக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக அதிமுக, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூரில் 100 இடங்களில் மனித பட்டிகள் அமைக்க திமுக திட்டமிட்டுள்ளது.
தற்போது 48 இடங்களில் மனித பட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கரூர் ஆட்சியர்ரவிகுமாரிடம் மார்ச் 20-ம் தேதி புகைப்படங்களுடன் புகார் அளித்தார். அப்போது, கோயில் நிலங்களிலும் மனித பட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், கரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ச.சுந்தரராமன் அறிவுறுத்தலின்பேரில், கரூர் காதப்பாறை மற்றும் வெண்ணெய்மலை ஆகிய இடங்களில் கோயில் நிலங்களில் தகரக் கொட்டகைகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனைகளை தொடர்புடையவர்களே நேற்று முன்தினம் அகற்றினர்.