சென்னை: பயணிகள் வசதிக்காக எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான ரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவை நீட்டிக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிப்பு செய்யப்பட உள்ளன.
அதன் விவரம்: சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06045) 4 சேவைகளும் (அக்.2 முதல் அக்.23-ம் தேதி வரை), கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06046) 4 சேவைகளும் (அக்.4 முதல் அக்.24-ம் தேதி வரை) நீட்டிக்கப்பட உள்ளன.
கோவை - ஜெய்ப்பூர் இடை யே, வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06181) 8 சேவைகளும் (அக்.8 முதல் நவ.26-ம் தேதி வரை), ஜெய்ப்பூர் - கோவை இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06182) 8 சேவைகளும் (அக்.11 முதல் நவ.29-ம் தேதி வரை) நீட்டிப்பு செய்யப்பட உள்ளன.
தூத்துக்குடியில் இருந்து நரசாபூருக்கு திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06019) 9 சேவைகளும் (அக்.5-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை), நரசாபூரில் இருந்து தூத்துக்குடிக்கு புதன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06020) 9 சேவைகளும் (அக்.7-ம் தேதி முதல் டிச.2-ம் தேதி) வரை நீட்டிக்கப்பட உள்ளன. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.