சென்னை: பிறவிக் குறைபாடுள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அதிநவீன அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு மறுவாழ்வு அளித்துள்ளதாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவமனையின் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) எஸ்.மதிவாணன், அறுவை சிகிச்சைத் துறை தலைவர் சி.சங்கரபாரதி, பச்சிளங்குழந்தைகள் நலத் துறை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் கூறியதாவது: சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே சுவாசக் குழாயும், உணவுக் குழாயும் பிரியாமல் ஒட்டியிருக்கும். இதனால் உணவுக் குழாய் ஓரிடத்தில் தடைபட்டுவிடும். இக்குழந்தைகளால் வாய் வழியாக உணவருந்த முடியாது.
3 குழந்தைகள்: அத்தகைய பாதிப்புடன் 3 குழந்தைகள் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதல்கட்டமாக கேஸ்ட்ரோக்டமி எனும் சிகிச்சை மூலம் வயிற்றில் சிறு குழாய் பொருத்தி அதன் வழியாக உணவு வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பெருங்குடலில் 15 செ.மீ. வெட்டி எடுக்கப்பட்டு, தடைபட்டிருந்த உணவுக் குழாய் பகுதியில் மாற்றிப் பொருத்தி பிரச்சினை சரிசெய்யப்பட்டது. இதேபோல் பெருங்குடலின் இறுதிப் பகுதியில் உள்ள நரம்புகள் சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே செயலிழந்திருக்கும். இதனால் அவர்களுக்கு ஆசனவாய் வழியே கழிவுகள் வெளியேறாது.
மாறாக, அறுவை சிகிச்சை செய்து பெருங்குடல் பகுதியை வெளியே எடுத்து அதன் வாயிலாக கழிவை அகற்ற வழிசெய்ய வேண்டும். இந்த சிகிச்சை கொலோனஸ்டமி எனப்படும். இதுவும் மிகச் சிக்கலான ஒன்று.
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த வகை சிகிச்சைக்கு பதிலாக ஆசனவாய் வழியே எண்டோஸ்கோபி முறையில் செயலிழந்த பெருங்குடல் பகுதியை நீக்கிவிட்டு, மற்ற பகுதியை இணைக்கும் சிகிச்சை 3 குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. இதன் பயனாக அவர்கள் அனைவரும் நலம் பெற்றுள்ளனர்.
பிறவியில் ஏற்படும் சிறுநீரகப் பாதை அடைப்புக்குள்ளான 4 குழந்தைகளுக்கும் திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள ரூ.15 லட்சம் வரை செலவாகும். ஆனால் இங்கு முதல்வர் காப்பீட்டின்கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.