திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

 
தமிழகம்

“அதிமுக ஆட்சி அமைந்ததும் நாமக்கல் ‘கிட்னி’ திருட்டு குறித்து விசாரணை, நடவடிக்கை உறுதி” - இபிஎஸ்

கி.பார்த்திபன்

திருச்செங்கோடு: அதிமுக ஆட்சி அமைந்ததும், கிட்னி திருட்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம் (தனி), திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூர் ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் பி.எஸ்.மோகன், சி.சந்திரசேகரன், சந்திரசேகர், பி.தங்கமணி, சேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ராசிபுரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் டி.துரைசாமி போட்டியிடுகிறார்.

இவர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. எனக்கு எம்பி என்று அடையாளம் கொடுத்த மாவட்டம் நாமக்கல் மாவட்டம். அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டங்களை பெற்ற ஒரே மாவட்டம் நாமக்கல் மாவட்டம்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை நடக்கிறது. திமுகவினர் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுக்கு துணை நிற்கின்றனர். அதனால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல் உள்ளவற்றில் ஈடுபடுகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 24 ஆயிரம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 18 ஆயிரம் பேர் சிறுமிகள். இதில் 6,900 பேருக்கு 84 கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் கொடுத்தால் சரியாக போய்விடுமா? பாலியல் பாதிப்பிற்கு ஆளான சிறுமிகளின் வாழ்க்கை என்னாவது. “அப்பா, அப்பா என்றால் எனது செவிக்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.

பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் போது சிறுமிகளின் சத்தம் அந்த அப்பாவுக்கு கேட்கவில்லையா? திமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வயதான பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அப்படிப்பட்ட மோசமான கேவலமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டுள்ளது.

போதை ஆசாமிகளின் செயலால் தமிழகம் தலை குனிந்து விட்டது. திருச்செங்கோடு தொகுதியில் கஞ்சா போதை மாத்திரை விற்பனை ஆகிறது. தேவனாங்குறிச்சியில் திமுக நிர்வாகி போலீஸ் மதுபான தொழிற்சாலை நடத்தினார்.

தமிழகத்தில் வறுமை என்ற நிலையே இல்லை என முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். அப்படி வறுமை இல்லை என்றால் எதற்காக கிட்னி விற்பனை செய்கின்றனர். வறுமையை பயன்படுத்தி ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் மருத்துவமனையில் கிட்னியை கொள்ளையடிக்கின்றனர். இந்த கொள்கை்காக அமைக்கப்பட்ட குழு அந்த மருத்துவமனையில் சோதனை நடத்தி கிட்னி விற்பனை செய்யப்பட்டது உண்மை என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்

இந்த திருட்டில் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்மந்தப்ட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவினர் நடத்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தால் போய் ஸ்கேன் செய்து பார்த்து கொள்ளவும்.

ஏனெனில் உறுப்புகள் காணாமல் போயிருக்கும். இந்த ஆட்சி கொடுமையான ஆட்சி. அதிமுக ஆட்சி அமைந்துடன் விசைத்தறி, கைத்தறிகளுக்கு கூடுதலாக இலவச மின்சாரம் வழங்கப்படும்.  நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தொகுதி மறுவரையறை வந்தால் நமக்கு எம்பி எண்ணிக்கை குறைந்துவிடும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா தமிழகத்தின் எம்பி தொகுதிகள் எந்த விதத்திலும் பாதிக்காது. 59 தொகுதிகளாக அதிகரிக்கும் என்றார். அப்போது நமக்கு மத்திய அரசு சதகமாக உள்ளது என்று தானே அர்த்தகம்.

நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டதால் நாட்டு மக்களின், பெண்களின் கனவு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுகவுக்கு தேர்தலில் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT