போடியில் அமலாக்கத் துறை சோதனை நடந்த ஏலக்காய் கிடங்கு. (உள்படம்) நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர்.
போடி: போடி நகராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவரின் ஏலக்காய் கிடங்கில் அமலாக்கத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
போடி நகராட்சித் தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த ராஜராஜேஸ்வரி. இவரது கணவர் சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், 29-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் ஏலக்காய் வர்த்தகம் செய்து வருகிறார். போடி - போடிமெட்டு சாலையில் ரயில்வே கேட் அருகே இவரது கிடங்கு அமைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று மதியம் இங்கு வந்தனர். கிடங்கு பூட்டியிருந்ததால் சங்கருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், வெகுநேரம் ஆகியும் அவர் வராததால், அமலாக்கத் துறையினர் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளேயே அலுவலகம் இருந்ததால், அங்கிருந்த ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி கிடங்கின் முகப்பில் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை தரப்பில் கூறியதாவது: கம்பம்மெட்டு அருகே கேரள மாநிலம் சேத்துக்குழி என்ற இடத்தில் ஏலக்காய் வியாபாரி ஒருவரது அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கடந்த 7 மாதங்களில் சுமார் ரூ.1,200 கோடி அளவுக்கு ஏலக்காய் வர்த்தகம் நடந்திருப்பது குறித்து விசாரணை நடந்தது.
இதுதொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், போடியிலும் அன்றைய தினமே முதல்கட்ட சோதனை நடைபெற்றது. இதில், பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது முழுவீச்சில் சோதனை நடந்து வருகிறது. பல கோடி அளவுக்கு நடந்துள்ள வர்த்தகம் தொடர்பாக முறையான ஆவணங்கள் உள்ளதா, முறையாக வரி செலுத்தப்பட்டதா என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.