சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், அக்கட்சியிலிருந்து விலகி ஆட்சி யைக் கவிழ்க்க ஒத்துழைக்க வேண்டும் என ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சதித் திட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உட்பட 11 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த நரேஷ், கரூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 5 பேரும் முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அடிக்கடி செல்போனில் உரையாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு முன்னாள் அமைச்சருக்கு பினாமியாகச் செயல்பட்டு வரும் இவர், சிங்கப்பூரில் இருந்தபடியே தவெக எம்எல்ஏ-க்களை இழுக்கத் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரி மாற்றம் மற்றும் ஹவாலா முறையிலான கொடுக்கல் வாங்கல் கள் நடந்திருப்பதையும் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான சோதனையின்போது கணக்கில் வராத ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தற்போது இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கேட்டு சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறையிடம் சென்னை காவல் துறை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கணேசன், ரகு, பிரகாஷ், சாமியப்பன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் கணேசனை போலீஸார் கைது செய்தனர். இதனால் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.