இந்திய தேர்தல் ஆணையம்
சென்னை: சமூக வலைதளங்களின் வாயிலாக குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து, தேவைப்பட்டால் அதுதொடர்பாக பிரத்யேகமாக விதிகள் வகுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஈடுபடுத்தியது, பணப்பட்டுவாடா செய்தது போன்ற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த வழக்கறிஞர் எல்.வாசுகி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தலில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை கையாள போதுமான சட்டப்பிரிவுகள் உள்ளன. அந்த சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தேர்தல் வழக்கு தொடரலாம்.
ரூ.599.24 கோடி பணம் பறிமுதல்: பணப்பட்டுவாடா போன்ற ஊழல் நடவடிக்கைகளை தடுக்க பறக்கும்படை, கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ரூ.599.24 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என ஏற்கெனவே அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தனித்தனியாக கடிதங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டன.
கட்டாயப்படுத்த முடியாது: இந்த வழக்கில் மனுதாரர் குறிப்பிட்ட எந்த சம்பவங்களையும் தெரிவி்க்கவில்லை. பொத்தாம்பொதுவாக குற்றம்சாட்டியுள்ளார். வாக்காளர்கள் 18 வயது நிரம்பியவர்கள். சுயமாக சிந்தித்து வாக்களிக்கக்கூடியவர்கள். எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் வாக்களிக்கும்படி அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ முடியாது. அதையும் தாண்டி வாக்காளர்கள் மத்தியில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க முனைவதும் ஒருவகையில் ஊழல் நடவடிக்கைதான்.
சமூக வலைதளங்களின் வாயிலாக குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து, தேவைப்பட்டால் அது்தொடர்பாக பிரத்யேகமாக விதிகள் வகுக்கப்படும். இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.