பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ம.பிரபு |
சென்னை: ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகம் அருகே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான தொழிலாளர்கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கூட்டமைப்பின் மாநில தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறோம். புயல், மழை, கரோனா, போன்ற அனைத்து பேரிடர் காலங்களிலும் உயிரை பொருட்படுத்தாமல் பாடுபட்டோம்.
எங்கள் நீண்ட நாள் கோரிக்கையான தினக்கூலி அடிப்படையில், ரூ.965-ஐ அரசே நேரடி ஊதியமாக வழங்கி படிப்படியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும். கடந்த மாதம் மின்வாரிய வெள்ளையறிக்கை வெளியிட்ட போது, ஒப்பந்த தொழிலார்களை அடையாளம் காண முடியவில்லை என்றனர்.
நாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் அரசே நேரடியாக களம்கண்டு அடையாளம் காணமுடியும். இதற்கு ஒரு மணி நேரம் போதுமானது. நாங்கள் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஒருமாத காலமாக அனைத்து மாவட்டத்திலும், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
இதற்கு தமிழக அரசு மற்றும் மின்வாரியமும் இன்று வரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, எங்கள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.