கோவை: கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவி்ன் சகோதரர் அலுவலகம், ஓய்வு பெற்ற பெண் அதிகாரியின் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (செப்.5) சோதனை நடத்தினர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சென்னை, திருச்சி, கோவையில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.
முந்தைய திமுக ஆட்சியில் பணி நியமனங்கள், பணியிட மாறுதல்கள், ஒப்பந்தங்கள் வழங்குதல் உள்ளிட்டவற்றில் விதிமீறல்கள், லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்ததன் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய கோவையில் உள்ள இரு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.
கோவையில் உள்ள திருச்சி சாலையில், சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழித்தடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது.
இந்தக் குடியிருப்பு வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் உள்ளது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் குழுவினர் இன்று காலை 8.30 மணியளவில் மணிவண்ணனின் அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலகத்தில் நுழைந்து தங்களது சோதனையை தொடங்கினர். அந்த சமயத்தில் அலுவலகத்தில் இருந்தவர்கள் யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. வெளியாட்கள் யாரும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் குழுவினர் இங்கு சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதேபோல், சுங்கம் அருகேயுள்ள சிவராம் நகரில் உள்ள ஓய்வு பெற்ற மாநகராட்சி பெண் அதிகாரி ஒருவரது என்பவரது வீடு உள்ளது. இவர், கோவை மாநகராட்சியில் பொறியியல் பிரிவு, நகரமைப்புப் பிரிவு உள்ளிட்டவற்றில் பணியாற்றியுள்ளார். கோவை மாநகராட்சி மட்டுமின்றி பல்வேறு மாநகராட்சிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சோதனை நடத்தினர். சென்னை போலீஸ் குழுவினர் இங்கு சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதேபோல், கோவையில் மேலும் இரு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இடங்கள் உறுதியாகவில்லை.