“அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேரு வீட்டில் சோதனை” - மு.க.ஸ்டாலின் கண்டனம்

“அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேரு வீட்டில் சோதனை” - மு.க.ஸ்டாலின் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: “அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேரு வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டுள்ளது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு, அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தும் சோதனை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மீதான சோதனை நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டுள்ளது.

ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டப்பேரவை வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.

இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்.நேருவும், திமுகவும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்கள் என மொத்தம் 19 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படும் தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

“அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேரு வீட்டில் சோதனை” - மு.க.ஸ்டாலின் கண்டனம்
தோழமை கட்சிகளுடன் செப்.9-ல் தவெக ஆலோசனை: கூட்டணிக்கு பெயர், ஒருங்கிணைப்பாளரை அறிவிக்க திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in