தமிழகம்

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத் துறை 5 மணி நேரம் விசாரணை

அரசு திட்டமிட்டு தன்னை வழக்கில் சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறையில் பணிகள் மேற்கொள்ளாமலேயே, ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.3.23 கோடி வழங்கி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்த எ.வ.வேலு, அரசு திட்டமிட்டு தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

நெடுஞ்சாலைத் துறையில் சுமார் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த மாதம் 24-ம் தேதி எ.வ.வேலு தொடர்புடைய 20 இடங்களில் சோதனையும் நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வழக்கு தொடர்பாக கடந்த 3-ம் தேதியே எ.வ.வேலு ஆஜராக லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்ததால் அப்போது ஆஜராகவில்லை.

அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜூலை 15-ம் தேதி லஞ்சஒழிப்புத் துறை முன்பு கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு தொடர்பாக, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்று காலை 10.50 மணி அளவில் எ.வ.வேலு ஆஜரானார். காலை 11 மணி முதல் அவரிடம் அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கினர். நெடுஞ்சாலை துறை முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எ.வ.வேலு மிகவும் பொறுமையாகப் பதிலளித்ததாக தெரிகிறது. அவர் அளித்த பதில்களை எழுத்து பூர்வமாகவும், வீடியோ ஆதாரமாகவும் போலீஸார் பதிவு செய்து கொண்டனர். காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை மாலை 4 மணி வரை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முழு ஒத்துழைப்பு

அப்போது செய்தியாளர்களிடம் எ.வ.வேலு கூறியதாவது: மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். அதன்படியே ஆஜராகியுள்ளேன். காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணையில், அதிகாரிகள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் எனது மனசாட்சிப்படி 100 சதவீதம் உண்மையான பதில்களை அளித்துள்ளேன். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன், இனியும் எப்போது அழைத்தாலும் வரத் தயாராக இருக்கிறேன்.

நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அரசு திட்டமிட்டு என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளது. 'மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை'. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இதைத் தாண்டி கூடுதல் கருத்துகளைத் தெரிவிக்க முடியாது. வரும் 28-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, நிச்சயம் நீதி கிடைக்கும்.

விசாரணையில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்பதை வெளியில் சொல்ல முடியாது. அம்பு எய்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள், காவல்துறை என்பது வெறும் அம்புதான். எனவே, அவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. 2 மாதங்களுக்கு முன்பு திமுக ஆட்சியிலும் இதே காவல் துறையினர்தான் பணியாற்றினார்கள். அவர்கள் சட்டப்படி விசாரணை நடத்தினர், நானும் அதற்கு ஒத்துழைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT