

மதுரை: பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனி நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலம் பழநி அடிவாரத்தில் உள்ளது. இந்த நிலத்தை அறக்கட்டளையிடம் இருந்து வாங்கி இருப்பதாகவும், அந்த நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப் பதிவு செய்ய பழநி சார்பதிவாளருக்கு உத்தரவிடக்கோரியும் சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக் கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பத்திரம் பதிவுசெய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கோயில் நிலம் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பத்திரப்பதிவில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மடத்தின் தக்கார் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயில் நிலம் தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கடந்த 2024 ஆக.19 அன்று தள்ளுபடியானது. இருப்பினும், அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி நீதிமன்றத் தில் தவறான தகவல்களை அளித்து பத்திரப்பதிவு செய்ய உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்த நிலத்தின் சட்டப்பூர்வ உரிமை மற்றும் நிர்வாகம் பழநி கோயில் செயல் அலுவலரிடம்தான் உள்ளது. தக்காரை எதிர் மனுதாரராகக் கூட சேர்க்காமல், அவரது தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே தனி நீதிபதி, பத்திரப் பதிவுக்கு அனுமதி வழங்கி உள்ளார். இந்த நிலப் பரிமாற்றம் தொடர்பாக தக்காரால் தொடரப்பட்ட மற்றொரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சார்பதிவாளர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லத்தவறிவிட்டார்.
பொது சொத்து மற்றும் ஆன்மிக மடத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தனி நபர்கள் அபகரிப்பதைத் தடுக்கும் பொருட்டும், சட்டம் மற்றும் உண்மைக்குப் புறம்பாக பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பதிவு செய்யப்பட்டுள்ள இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது என ஏற்கெனவே தீர்ப்புகள் உள்ளன. தனி நீதிபதியிடம் உரிய எதிர் தரப்பினரைச் சேர்க்காமல் உத்தரவை பெற்றுள்ளனர். இது நீதிமன்றத்தை ஏமாற்றி பெறப்பட்ட உத்தரவாகும். அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்யக் கூடாது எனக் கோயில் நிர்வாகம் ஏற் கெனவே பதிவுத்துறையிடம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சொத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே, வழக்கமான சார் பதிவாளரை விடுப்பில் அனுப்பி விட்டு, பொறுப்பு சார்பதி வாளரை வைத்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். இது முற்றிலும் முறைகேடாக நடந்த செயலாகும். பிரச்சினைக்குரிய மத வழிபாட்டு இடங்களில் பத்திரப் பதிவு செய்யும்போது கோயில் நிர்வாகம் உள்பட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே முடிவு செய்ய வேண்டும் என பத்திரப் பதிவு சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. அப்படியான சூழலில் சார்பதிவாளர் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முறைகேடாக பதிவு செய்துள்ளார்.
ஒரு சார்பதிவாளர் இவ்வாறு எப்படி முறைகேடான பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பியபோது, அரசு தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்காலிகப் பணி நீக்கம் என்பது போதுமானதாக இல்லை. எனவே பத்திரப் பதிவு முறைகேடாக நடைபெற்றுள்ளதால், அது செல்லாது. ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
சிபிசிஐடி விசாரணை
இதற்கிடையில், கோயில் நில முறைகேடு வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார்.
சார்பதிவாளரை கைது செய்யத் தடை
பழநியில் ரூ.100 கோடி கோயில் நிலத்தை தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பழநியில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ராஜசேகர் நேற்று விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தொடர்புடைய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார். பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக சிபிசிஐடி பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 17-க்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.