வேலூர்: அமைச்சர் துரைமுருகன் குடும்பத்துக்கு ரூ.261கோடியே 90,29,497 சொத்துகள் உள்ளது. காட்பாடி தொகுதியில் துரைமுருகன் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு, மாற்று வேட்பாளராக மருமகள் சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இவர்களின் சொத்து விவரம் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதில், துரைமுருகன் வசம் 500 கிராம் தங்க நகைகள், 1 காரட் வைரம், 2 கிலோ வெள்ளி பொருட்களும், அவரது மனைவி சாந்தகுமாரி வசம் 2,224 கிராம் தங்க நகைகள், 5.5 காரட் வைரம், 6 கிலோ வெள்ளி பொருட்களும் உள்ளன.
இந்த நகை உள்ளிட்ட பொருட்கள் 2021 தேர்தலில் குறிப்பிட்ட அளவே உள்ளன. இருவரும் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்க நகை கூடவாங்கவில்லை. மருமகள் சங்கீதா வசம் 3,664 கிராம் தங்க நகைகள், 3 காரட் வைரம், 31.70 கிலோ வெள்ளி உள்ளன.
அமைச்சர் துரைமுருகன் மீது 2 லஞ்ச ஒழிப்பு வழக்கு உட்பட மொத்தம் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சங்கீதா வசம் 3 கார்களும், மகன் கதிர்ஆனந்த் வசம் 5 கார்களும், ஒரு இரு சக்கர வாகனமும் உள்ளன. துரைமுருகன் கைவசம் ரூ.26 லட்சத்து 34,151 பணமும், சாந்தகுமாரியிடம் ரூ.25 லட்சத்து 57,939 தொகையும் உள்ளன.
துரைமுருகனின் அசையும் சொத்து மதிப்பு ரூ.4 கோடியே 1 லட்சத்து 56,054-ம் சாந்தகுமாரிக்கு ரூ.14 கோடியே 16 லட்சத்து 25,722-ம் அசையா சொத்துக்களின் மதிப்பாக துரைமுருகன் வசம் ரூ.11 கோடியே 44 லட்சத்து 86,954-ம் சாந்தகுமாரி வசம் ரூ.62 கோடியே 41 லட்சத்து 69,697-ம் உள்ளது. துரைமுருகனுக்கு கடனாக ரூ.11 லட்சத்து 25 ஆயிரமும், சாந்தகுமாரிக்கு ரூ.15 கோடியே 20 லட்சத்து 18,441 உள்ளது.
ஆக மொத்தம் இருவரிடமும் அசையும், அசையா சொத்து மதிப்பு ரூ.73 கோடியே 86 லட்சத்து 56,651 உள்ளது. அதேபோல், துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், மருமகள் சங்கீதா, கதிர்ஆனந்த் மூத்தமகள் செந்தாமரை ஆகியோரின் அசையும் அசையா சொத்துகளையும் சேர்த்து மொத்தமாக துரைமுருகன் குடும்பத்தினர் வசம் ரூ.261 கோடியே 90 லட்சத்து 29,497 உள்ளது.