தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் கட்சிகள் கூடுதல் சீட்களை பெறலாம் என எண்ணினர்.
ஆனால் திமுக கூட்டணியில் புதிதாக கட்சிகள் இணைந்ததால் கடந்த முறை போட்டியிட்டதை விட தொகுதிகளும் குறையலாம் என கூறப்பட்டதால் கூட்டணி கட்சியினர் கலக்கம் அடைந்தனர். கடந்த 2021-ம் சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது. இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் துரை வைகோ தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இந்த சட்டப்பேரவை தேர்தலில் கட்சிக்கான அங்கீகாரத்தை மீண்டும் பெற வேண்டும் என மதிமுக முயற்சிக்கிறது. இதனிடையே திமுக தொகுதிப்பங்கீட்டு குழுவினர் உடன் நடந்த பேச்சுவார்த்தையில், மதிமுக குழுவினர் 12 தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறியிருந்தனர். ஆனால் திமுக குழுவினர் 5 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
குறைந்தபட்சம் 7 தொகுதிகளில் வெற்றிபெற்று மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என மதிமுக ஆசைப்படும் நிலையில் கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுவதால் துரை வைகோ அப்செட்டில் உள்ளார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகையில் “உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என வைகோவிடம் முதல்வரே நேரடியாக கோரியிருக்கிறார். முதல்வரே நேரடியாக பேசுவதால் ஒப்புக்கொள்ளலாமா என வைகோ யோசிக்கிறார். ஆனால், இதில் துரை வைகோவுக்கு துளியும் விருப்பமில்லை. திமுகவின் இந்த கோரிக்கையை நாம் ஏற்க கூடாது என அவர் வலியுறுத்தி வருகிறார்.” என்றனர்.
அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம்: இந்நிலையில், மதிமுக அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் தாயகத்தில் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என மதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.