

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐஜேகே கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ‘மைக்’ சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐஜேகேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 36 லட்சம் வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியானது ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில், ஐஜேகே தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தோம். அதன்படி தேர்தல் ஆணையம் ஜஜேகேவுக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் லஞ்சம், ஊழல், போதை கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்கவும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், தமிழக மக்களுக்காக ஐஜேகே எப்போதும் துணை நிற்கும் என்பதை உரக்க சொல்வதற்காக கிடைத்திருக்கிறது இந்த மைக் சின்னம்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் மைக் சின்னத்தை மக்களின் மனதில் பதியவைக்க வேண்டும். 2026 தேர்தலில் வெற்றிபெற்று, தலைசிறந்த மாநிலம் தமிழகம் என்ற குரலை உலகெங்கும் ஒலிக்க வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.