துரை வைகோ
கோவை: “மறைமுக குதிரை பேரம் நடத்தி இடைத்தேர்தலை திணித்தது திமுகவும், அதிமுகவும் தான். அவர்களின் மறைமுக குதிரை பேரத்தின் காரணமாகதான் நாங்கள் உள்ளிட்டோர் கூட்டணியை விட்டு வெளியே வந்தோம்” என துரை வைகோ எம்.பி கூறினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவரை மதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியது: “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மதுராந்தகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தாராபுரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும், கருத்தியல் ரீதியான வாதங்கள் இருக்கலாம். அதுதான் நாகரிகமான அரசியல். சமீப காலமாக ஆபாச சொற்கள், ஒற்றை அர்த்தம் கொண்ட சொற்களை பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. அந்தந்த கட்சியின் தலைவர்கள் முன்னுதாரனமாக, நாகரிகமாக செயல்பட வேண்டும்.
கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் இதுபோன்ற இழிச்சொற்களை பயன்படுத்தினால், அவர்களை பக்குவப்படுத்தி அரசியல்படுத்த வேண்டிய பொறுப்பு கட்சி தலைவர்களுக்கு உண்டு.
ஆனால், கட்சி தலைவர்களே இதுபோன்ற இழிவான வார்த்தைகளை பயன்படுத்துவது, ஆபாசமான முறையில் நடப்பது கடந்த சில மாதங்களாக மோசமாக போய்க் கொண்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. அறிஞர் அண்ணா கண்ட இயக்கமான திமுகவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அந்தக் கட்சி தலைவர்களிடமே இல்லை. இது கண்டிக்கத்தக்க செயல்.
இதுபோன்ற விஷயங்களில் தலைவர்களே இப்படி செயல்பட்டால் தொண்டர்கள் நிர்வாகிகள் என்ன செய்வார்கள். எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சை அனைவரும் பார்க்கின்றோம். தலைமை சரியில்லை என்றால் கீழே உள்ளவர்கள் எப்படி செயல்படுவார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அந்த இயக்கத்தின் தலைவர்கள் தான்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கூடாது என்பது எங்கள் வாதம். புதிய அரசுக்கு அரசியல் அனுபவம், ஆட்சி அனுபவம் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் சில நேரங்களில் இதுபோன்ற அறிவிப்புகள் வந்தாலும், கூட்டணிக் கட்சியினர், ஊடகங்கள் தெரிவிக்கும்போது, அதை ஏற்றுக் கொண்டு அந்த உத்தரவை வாபஸ் வாங்குகின்றனர்.
ஜனநாயக அடிப்படையில், ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக அதனடிப்படையில் வெளியிலிருந்து கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆதரவு கொடுக்கின்றனர். இத்தேர்தலில் அவர்கள் தனியாக நிற்கிறார்கள். அது தவறில்லை.
நாங்கள் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் உள்ளோம். இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும்.
திமுக தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்குமாறு மறைமுகமாக கூட்டணிக் கட்சிகளிடம் பேசினர். அதன் காரணமாக மதிமுக போன்ற இயக்கங்கள் கூட்டணியை விட்டு வெளியேறினோம்.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது என்கின்றனர். ஆனால், திணித்தது யார்? திமுகவும், அதிமுகவும்தான் திணித்தனர். இருவரும் மறைமுக கூட்டணி பேரத்தை தொடங்கினார்களோ, அதன் காரணமாக இடைத்தேர்தல் நடக்கிறது.
குதிரை பேரத்தை திமுக தலைமையும், அதிமுக தலைமையும் நடத்தினர். இரு கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு விரோதமாக, தமிழக மக்களுக்கு விரோதமாக அந்த குதிரை பேரத்தை நடத்தியவர்கள் பழனிசாமியும், ஸ்டாலினும் தான். அதனால்தான் எம்.எல்.ஏக்கள் ராஜினமா செய்கின்றனர்.
இந்த இடைத்தேர்தலை திணித்தது அதிமுகவும், திமுகவும் தான். திமுக தலைமையும், அதிமுக தலைமையும் செய்த மறைமுக குதிரை பேரத்தின் காரணமாகவே நாங்கள் உள்ளிட்டோர் கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். அதிமுக நிர்வாகிகளின் ராஜினாமாவுக்கு காரணமே இந்த குதிரே பேரமே.
டெல்லியை பொறுத்தவரை திமுக - பாஜக இடையே மறைமுக டீல் செய்துள்ளனர். மறுவரையரையில் 7.18 சதவீதம் உறுதி செய்துவிட்டால் அந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக கூறிவிட்டனர். காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்க திமுகவினர் முயற்சிக்கின்றனர். அவ்வாறு உருவாகும் மூன்றாவது அணி பாஜகவுக்கு தான் சாதகமாக இருக்கும். குதிரை பேரத்தை செய்வது திமுக தலைமை தான்” என்றார்.