4 தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர் விஜய் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வாதம்

4 தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர் விஜய் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வாதம்
Updated on: 
2 min read

சென்னை: திருச்சி கிழக்கு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற முதல்வர் விஜய், முன்னாள் எம்எல்ஏக்கள் தரப்பு கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து ஜூலை 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வமான வாதத்தில், ‘இடைத்தேர்தல் அறிவிக்காதது என்பது நிரந்தரமானது அல்ல. உயர் நீதிமன்றம் வழக்கை முடித்தவுடன், தேர்தல் நடத்தப்படும். பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கு கடந்த 8-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது பெருந்துறை தொகுதி காலியானதாக உள்ளது. இந்த விவகாரத்தில், மேல்முறையீட்டுக்கு நவ.24-ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால், அந்த தொகுதியைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் சட்டப்படி முடிவு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 151 (ஏ) பிரிவு, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என கூறப்படவில்லை. ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. தேர்தல் வழக்கில், தன்னை தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த தொகுதியை காலியானதாக கருத முடியாது.

ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதி வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது. தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், அதே காலக்கட்டத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது.

தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதினால், தேர்தல் ஆணையம் அதனை வரவேற்கிறது.

எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக எந்த காரணத்தையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் முடிவெடுத்த பிறகு, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.

இடைத்தேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற முதல்வர் விஜய் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த வாதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, முதல்வர் விஜய், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தரப்பில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது.

திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பில், தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கு, தேர்தல் ஆணைய தரப்பு வாதத்துக்காக ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டது.

4 தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர் விஜய் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வாதம்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: அக்.1-ல் தவெக கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in