ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசியதால் பாம்பன் பாலத்தில் நேற்று காலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மாலையில் காற்றின் வேகம் குறைந்ததால், மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக சூறைக்காற்றுடன் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலையில் பாம்பன் பாலத்தில் 64 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
அதனால் நேற்று காலை ராமேசுவரத்திலிருந்து மதுரை புறப்பட்ட பயணிகள் ரயில் அக்காள்மடத்தில் நிறுத்தப்பட்டது. மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் உச்சிபுளி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
திருவனந்தபுரம்-ராமேசுவரம் அமிர்தா விரைவு ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55-க்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் ராமேசுவரம்-மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டது.
திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த விரைவு ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்பட்டது. அயோத்யா-ராமேசுவரம் ஸ்ரதா சேது விரைவு ரயில் நேற்று காலை மானாமதுரையில் நிறுத்தப்பட்டது. அதேபோல, நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு ராமேசுவரம் வந்த விரைவு ரயில் மானாமதுரையில் நிறுத்தப்பட்டது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பாம்பன் பாலத்தில் நேற்று மாலை காற்றின் வேகம் குறைந்தது. 35 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதை அடுத்து, ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயில் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வழியாகச் சென்றது. தொடர்ந்து, ராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் ராமேசுவரத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.