படம்: எல்.பாலச்சந்தர்

 
தமிழகம்

தொடர் கனமழையால் ராமேசுவரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - பொதுமக்கள் கடும் அவதி!

கி.தனபாலன்

ராமேசுவரம்: டிட்வா புயல் தாக்கம் காரணமாக ராமேசுவரத்தில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதுடன், வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று மதியம் தொடங்கிய மழை இன்று மாலை வரையும் தொடர்ந்து பெய்து வருகிறது. ராமேசுவரம் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் கனமழையும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. பாம்பன் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிடம் பகுதிகளில் 7 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழையால் ராமேசுவரம் அண்ணாநகர், காந்திநகர், திருவள்ளுவர் நகர், நடராஜபுரம், பாம்பன் சின்னப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கியுள்ளது.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வைத்திருந்த வீட்டு உபயோக பொருட்கள், கட்டில் பாத்திரம் தண்ணீரில் மிதக்கின்றது. தண்ணீரில் இருந்து பாதுகாக்க குழந்தைகளுடன் கட்டிலில் அமர்ந்து வாழ்க்கை நடத்துகின்றனர்.

பெரும்பாலான குடும்பங்கள் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து வீடுகளை சுற்றி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இரவு நேரங்களில் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் நுழைவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ராமேசுவரம் நகராட்சி, பாம்பன், மண்டபம் ஊராட்சி நிர்வாகங்கள் தேங்கியுள்ள மழை நீரைவெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அண்ணாநகர், திருவள்ளுவர் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்கள், வீடுகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் தங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகள், ஆடுகளை தூக்கிக்கொண்டு மேடான வேறு பகுதிக்கு செல்கின்றனர்.

வானம் இருட்டி மேகமூட்டத்துடன் காணப்படுவதால் பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தொடர்மழையால் ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT