கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் அலுவலர்களின் அலட்சியத்தால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் புதிதாக பெயர் சேர்த்த இளம் வாக்காளர்களுக்கு, வெவ்வேறு வாக்காளர் எண்ணில் இரு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், அவர்கள் குழப்பம் அடைந்தனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டது.பிப்.23-ம் தேதி வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி 5.67 கோடி பேர் இருந்தனர்.
மொத்த வாக்காளர்களில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சமாக இருந்தது. அதன் பிறகு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனுமதிக்கப்பட்டது.
இதனால், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடியாக உயர்ந்தது. இதில் 18 வயது இளம் வாக்காளர் எண்ணிக்கை மட்டும் 14.59 லட்சம் ஆனது. 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் சிலருக்கு ஒரே தொகுதியில், ஒரே பாகத்தில், ஒரே வாக்குச்சாவடியில் வெவ்வேறு எண்களில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கு இரு வாக்காளர் அட்டைகள் வந்துள்ளன.
பூத் சிலிப்பும் இரண்டாக கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் இதுபோன்ற குளறுபடிகள் அதிமாக நிகழ்ந்துள்ளன. சில பிஎல்ஓக்கள், ஒரு நபருக்கு இரு பூத்சிலிப்புகளையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.
ஒருசிலர் இரண்டில் ஒரு பூத் சிலிப்பை திரும்ப பெற்றுக் கொண்டனர். அதேநேரம் இரு பூத் சிலிப்புகள் மற்றும் இரு வாக்காளர் அட்டைகளை வைத்திருந்த இளம் வாக்காளர்கள் எதை பயன்படுத்துவது எனத் தெரியாமல் குழம்பிப் போயினர்.
இதுதொடர்பாக சென்னை, வில்லிவாக்கம் தொகுதியைச் சேர்ந்த பெற்றோர் சிலர் கூறும்போது, “இதுபோன்ற இரட்டை பதிவுகளை நீக்குகிறோம் என்று சொல்லித்தானே எஸ்ஐஆர் நடத்தப்பட்டது.
அதன் பிறகும் இரட்டை பதிவு செய்வதை என்ன வென்று சொல்வது” என்றனர். மேலும், சென்னை அயனாவரம் பகுதியில் பெயர் சேர்க்க ஒருவர் புகைப்படத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை வழங்கியுள்ளார்.
அந்த படிவத்தை அப்படியே ஸ்கேன் செய்து புகைப்படமாக வாக்காளர் அட்டையில் இடம் பெறச் செய்துள்ளனர். இதனால் வாக்காளர் புகைப்படம் தெளிவில்லாமல் உள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, “அது தொடர்பாக ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும்” என்றனர்.