

பெரும்பத்து கிராம மக்கள் வாக்குப் பதிவை புறக்கணித்ததால் வாக்குச் சாவடி வெறிச்சோடியது. | | படம்: மு. லெட்சுமி அருண் |
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்ததால் வாக்குச்சாவடி வெறிச்சோடியது.
இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் 6 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மற்ற 4 பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து 9 பேரை கைது செய்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் அரசுத்தரப்பும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும் தெரிவித்து, பெரும்பத்து இந்திரா காலனி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இங்குள்ள டிடிடிஏ தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
பெரும்பத்து கிராமத்தில் 471 ஆண்கள், 498 பெண்கள் என்று மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 பேர் மட்டுமே நேற்று பிற்பகல் வரையில் வாக்களித்திருந்தனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022-ம் ஆண்டில் மனிதக் கழிவு கலந்தது தெரியவந்தது.
இந்த செயலை இறையூர் மக்கள் செய்ததாக வேங்கைவயல் மக்களும், வேங்கைவயல் மக்கள் செய்தாக இறையூர் மக்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர். இதன்பேரில் இருதரப்பினருக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். வழக்கு பதிந்ததை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இரண்டு ஊர் மக்களும் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து இருந்தனர். இருதரப்பிலும் சில அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து இறையூர் மக்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு நேற்று வாக்களித்தனர். வேங்கைவயல் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.
மேலும், எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேங்கைவயலில் கருப்புக் கொடி கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடைசி நேரத்தில் வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர் வாக்களித்தனர்.
மேலும் இரு கிராமங்கள்
இதுபோல், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இடமாற்றம் செய்யக்கோரி இக்கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி பொட்டலூரணி கிராமத்தில் இயங்கும் மீன் கழிவு ஆலையைக் கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.