பறிமுதல் செய்யப்பட்ட `ஹாஷிஷ்' போதைப் பொருள்.
ராமேசுவரம்: மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரூ.25 கோடி மதிப்புள்ள ‘ஹாஷிஷ்’ போதைப் பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்தனர்.
தலைமன்னார் அருகே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து சென்றபோது, சந்தேகத் துக்குரிய வகையில் தமிழக எல்லையிலிருந்து இலங்கை எல்லைக்குள் ஒரு ஃபைபர் படகு நுழைந்தது.
அந்தப் படகை இலங்கை கடற்படையினர் விரட்டிப் பிடித்து சோதனையிட்ட போது, உள்ளே போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேரைப் பிடித்து, தாழ்வுப்பாடு கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர், இருவரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த 50 கிலோ ‘ஹாஷிஷ்’ போதைப் பொருள் மற்றும் படகை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.25 கோடி ஆகும். கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.