படம்: வி.எம்.மணிநாதன்.

 
தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவர் வீட்டில் போதைப்பொருள் பறிமுதல்: அமலாக்கத் துறை அதிகாரிகளை சுற்றவிட்ட போலீஸ்!

வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் சிஎம்சி டாக்டர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மெத்தப்பட்டமைன், கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக புகார் அளிக்க காவல் நிலையம், போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு என அமலாக்கத் துறையினர் மாறி மாறி அலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் சிஎம்சி மருத்துவர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, மருத்துவர் பிளிங்கின் என்பவர் தங்கியுள்ளார். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎம்சி அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மருத்துவர் பிளிங்கின் கேரள மாதிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தற்போது விடுமுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இவரது குடியிருப்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் குழுவினர் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் நேற்று சோதனை நடத்த முயன்றனர். அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவர் வருவதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால், அவர் குடியிருப்புக்கு திரும்பாமல் திடீரென தலைமறைவானார்.

இதையடுத்து, அருகில் வசிக்கும் மருத்துவர்கள் உதவியுடன் பிளிங்கின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நடந்த சோதனையில் 10 கிராம் மெத்தப்பட்டமைன், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை தோட்டப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க அமலாக்கப்பிரிவு போலீஸார் சென்றனர். அங்கு புகாரைப் பெற மறுத்த போலீஸார், தங்களுக்கு தொடர்பில்லாத சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் குறித்து வழக்குப்பதிவு செய்ய முடியாது என்றும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் பிரிவில் (என்.ஐ.பி) ஒப்படைக்கும்படியும் கூறி அனுப்பி வைத்தனர்.

பின்னர், காட்பாடியில் உள்ள என்.ஐ.பி அலுவலகத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அந்த அலுவலகம் பூட்டியிருந்த நிலையில் தகவலின்பேரில் சிறிது நேரத்தில் என்.ஐ.பி போலீஸார் வந்தடைந்தனர். அமலாக்கத் துறை அதிகாரிகள் என்.ஐ.பி போலீஸாரிடம் நடந்த விவரங்களை கூறினர்.

அவர்களும் தங்கள் பிரிவில் குறைந்த எடைகொண்ட போதைப் பொருட்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்றும் ஒரு கிலோவுக்கு மேல் இருந்தால் வழக்குப்பதிவு செய்வோம் எனக் கூறியதுடன் வேலூர் வடக்கு காவல் நிலையம் செல்லும்படி அனுப்பி வைத்தனர். வேறு வழியில்லாமல் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் வேலூர் வடக்கு காவல்நிலையம் சென்றனர்.

அமலாக்கத் துறை அதிகாரிகளைப் பார்த்ததும் திகைப்படைந்த வடக்கு காவல் நிலைய போலீஸார், அவர்களை காவல் நிலையத்திலேயே அமர வைத்து மீண்டும் என்.ஐ.பி போலீஸாரை காவல் நிலையத்துக்கு வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

அமலாக்கத் துறை அதிகாரிகளை வேலூர் - காட்பாடி என மாறி மாறி போலீஸார் சுற்றவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், யார் வழக்குப்பதிவு செய்வது என்பதில் இன்று பிற்பகல் வரை முடிவு எட்டப்படவில்லை. மேலும், போதைப் பொருளை கையோடு எடுத்துவராமல் அந்த வீட்டில் வைத்து அதை செல்போனில் எடுத்த புகைப்படத்தை மட்டும் காட்டியதால் போலீஸார் செய்வது தெரியாமல் திகைப்பில் உள்ளனர்.

SCROLL FOR NEXT