படம்: நா.தங்கரத்தினம்

 
தமிழகம்

சொட்டு தண்ணீர் கூட வராமல் வறட்சிக்கு இலக்கான வைகை ஆறு

பொறுப்பை தட்டி கழிக்கிறதா பொதுப்பணித் துறை ?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தண்ணீர் திறந்து 4 மாதங்களுக்கு மேலாகி விட்டதால், வைகை ஆறு நிரந்தர வறட்சிக்கு இலக்காகி புதர் காடாக மாறியுள்ளது. வைகை ஆற்றை மறு சீரமைத்து அழகு படுத்த பொதுப்பணித் துறை பொறுப்பை தட்டிக் கழிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் 71 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், 20 அடி முதல் 30 அடி வரை வண்டல் மற்றும் களிமண் படிந்துள்ளதால், தற்போது அணையில் நீர் தேக்கும் கொள்ளளவு குறைந்து விட்டது. வைகை அணைக்கு, பெரியாறு அணையில் இருந்தும், மூல வைகையில் இருந்தும் தண்ணீர் வருகிறது.

பெரியாறு அணையில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்தாலும், அந்த அணையில் நீர்மட்டம் குறைந்தால் உடனடியாக தண்ணீர் திறந்து விடப்படும் நீர் அளவு குறைக்கப்படுகிறது. மூல வைகையில் மழை பெய்தால் மட்டுமே வைகை அணைக்கு தண்ணீர் வருகிறது. மற்ற நீர் ஆதாரங்கள் எதுவும் வைகை அணைக்கு கிடையாது.

வைகை ஆறு மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீர், விவசாய பாசனத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. குடிநீர் திட்டங்களுக்கும், விவசாய பாசனத்துக்கும் மட்டுமே வைகை அணை தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

ஆற்றில் திறந்து விடுகிற அளவுக்கு வைகை அணை நீர்மட்டம் போதிய அளவு உயரவில்லை. பெருமழை பெய்து வைகை அணை நிரம்பும் காலக்கட்டத்தில் மட்டுமே. ஆற்றில் அபூர்வமாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து டிச.24 வரை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன் பிறகு சுமார் 4 மாதங்களாக ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லை. கடைசியாக சித்திரைத் திருவிழாவுக்கு பெரியாறு பாசன இணைப்பு கால்வாய் மூலமே வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இப்படி ஆண்டுக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறப்பதால் மதுரை வைகை ஆற்றில் கடந்த கால் நூற்றாண்டாகவே இயல்பான நீரோட்டம் இல்லை.

வைகை ஆறு நிரந்தர வறட்சிக்கு இலக்காகி கருவேல மரங்கள் நிறைந்தும், ஆகாய தாமரைச் செடிகள் படர்ந்தும், மணல் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில் பாதாள பள்ளங்கள், கரைகள் ஆக்கிரமிப்பும் காணப்படுகிறது. அதனால், மதுரை மாநகர பகுதியில் வைகை ஆறு அடர்ந்த காடு போல புதர்மண்டி கிடக்கிறது. கடந்த காலத்தில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்தால். மதுரை ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும்

தொட்டபடி கரைபுரண்டு ஓடும். ஆனால், தற்போது வைகை அணையில் தண்ணீர் திறந்தால் ஆற்றின் நடுவில் ஓடை போல தண்ணீர் ஓடுகிறது. ஆற்றில் நடந்த மணல் கொள்ளையால் தண்ணீர் உருண்டோடும் தன்மை குறைந்து ஆங்காங்கே தேங்கியும், நீர் உறிஞ்சப்பட்டும் மதுரையை நெருங்கும்போது தண்ணீர் சிற்றோடை போல் ஓடுகிறது.

தடுப்பணைகளால் பயனில்லை: வறட்சிக்கு இலக்கான மதுரை வைகை ஆற்றை மீட்டெடுக்கவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆற்றை அழகுபடுத்தவும் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மதுரையில் கட்டப்பட்ட தடுப்பணைகள் பயனுள்ளதாக அமையவில்லை. மாறாக, தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது தான் மிச்சம்.

வைகை ஆற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பொதுப்பணித் துறை தடுப்பணைகளைக் கட்டியதோடு சரி, அதன் செயல்பாட்டை கண்காணிப்பதே இல்லை. தனது இயல்பையும், அழகையும் இழந்து வழிநெடுக புதர் காடாக காணப்படும் வைகை ஆற்றை மீட்டெடுக்க பொதுப்பணித் துறை பொறுப்பை தட்டிக்கழிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை மக் களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT