புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி |கோப்புப் படம்
கோவை: “காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் காட்டக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஆக.10) செய்தியாளர்களிடம் கூறியது: “காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் காட்டக் கூடாது. கடந்த 3 மாதத்தில் 40 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்க வேண்டும். இம்முறை குறுவை சாகுபாடி செய்ய முடியவில்லை. குடிநீர் பிரச்சினை, கால்நடை உயிரிழப்பு என பிரச்சினைகள் இருக்கின்றன.
மேகேதாட்டு அணையை கனவுத் திட்டமாக செயல்படுத்த கர்நாடக முதல்வர் முயற்சித்து வருகிறார். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்து கின்றனர். ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போதும், அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என சொல்கின்றனர்.
தமிழகத்துக்கு முன்பு 600 டி.எம்.சி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 30 லட்சம் ஏக்கர் விளைநிலம் இப்போது 3 லட்சமாக மாறிவிட்டது. இப்போது கர்நாடகத்தில் விளைநிலம் 30 லட்சம் ஏக்கராக மாறிவிட்டது.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மறுத்து வருகின்றனர். ஆனால், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடத்துகின்றனர்.
தொகுதி மறுவரையறை என்பது மக்கள் பிரச்சினையே இல்லை என தவெக முன்பு கூறியது. காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்தால் காங்கிரஸ் கட்சியும், அங்குள்ள ரசிகர்களும் வெறுப்பு கொள்வார்கள் என்பதால் செய்யவில்லை. வரலாற்றுப் பிழையை முதல்வர் விஜய் செய்துவிடக் கூடாது.
அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து கூட்டம் நடத்த வேண்டும். விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிள் ஆகியோரை அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து மனு அளிக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் உத்திரவாதத்தை பெற வேண்டும். பிலிகுண்டுவில் தண்ணிர் திறந்து விடும் அதிகாரம் நடுநிலையோடு இருக்கும் அமைப்பிடம் இருக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக சென்னையில் வரும் 16-ம் தேதி அனைத்துக் கட்சி கூடி பேச இருக்கின்றோம்.
தேர்தலுக்கு முன்பு வரை “ஃபேர் டிலிமிட்டேஷன்” (fair delimitation) என்பதில் இருந்து காங்கிரஸ் பல்டி அடித்து தமிழகத்தில் டிலிமிட்டேஷன் தேவையில்லை என சொல்கின்றது. இது அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவில், மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் மறுசீரமைப்பு நடைபெறும். அப்போது பாதிப்பு வரும், இதை தடுத்து நிறுத்த வேண்டாமா?
காவிரி விவகாரத்திலும் குந்தகம், மறுசீரமைப்பிலும் குந்தகம் என தமிழக அரசு இருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் சட்டம் வரவில்லை என்றாலும் மறுசீரமைப்பு நடைபெறும்.
காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பகைத்து கொள்ளக் கூடாது என்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு சிறு நெருக்கடி கூட வந்து விடக்கூடாது என நினைக்கின்றது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்க தயாராகிவிட்டது தவெக அரசு. தவெகவின் பலவீனத்தை காங்கிரஸ் பயன்படுத்தி கொள்கின்றது. காவிரி விவகாரத்தில் தமிழக மக்களை ஒன்று திரட்டி ஓரணியில் நிறுத்துவது என்பது அடிப்படையாகும். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினால் என்ன குறைந்து போகும். காங்கிரஸ் கட்சி உங்களை அழுத்துகின்றதா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனி தீர்மானம் ஏற்கெனவே சட்டப்பேரவையில் பலமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்க வேண்டியது தானே. பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது இதைத்தான் பாடுவோம் என சொல்ல வேண்டும். மத்திய அரசு உடன் மோதல் போக்கு இல்லை என்றால் சரணாகதி அடைய தயாராக இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை பார்த்துதான் சொல்ல வேண்டும்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.