சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர், ஜல்ஜீவன் திட்டங்களை செயல்படுத்தியும் குடிநீர் பிரச்சினை தொடர்கிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வுசெய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை நகராட்சி, திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, சிங்கம்புணரி ஆகிய 4 பேரூராட்சிகள், 779 ஊரகப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் எஸ்.புதூர் ஒன்றியம் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவகங்கை மாவட்டத்துக்கென தனியாக ரூ.2,119.07 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் கடந்த 2021 பிப்ரவரியில் தொடங்கப்பட்டு, நடப்பாண்டு ஜனவரி 31-ல் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை, மானாமதுரை நகராட்சிகள் இணைக்கப்பட்டன.
அத்துடன், ஏற்கெனவே ராமநாதபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பயன்பெற்று வந்த சிவகங்கை நகராட்சியும் புதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதுதவிர, மாவட்டத்தின் 11 ஒன்றியங்களில் உள்ள 2,452 ஊரக குடியிருப்புகள், கானாடுகாத்தான், புதுவயல், கோட்டையூர், மானாமதுரை, திருப்புவனம், பள்ளத்தூர், கண்டனூர், நாட்டரசன்கோட்டை ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன.
புதிய திட்டத்தில் 16.12 லட்சம் பேருக்கு தினமும் சராசரியாக 86.42 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது தவிர, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊராட்சிகள் அனைத்திலும் உள்ளூர் குடிநீர்த் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. மேலும், வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டமும் மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை 2,53,781 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இன்னும் குடிநீர் பிரச்சினை தொடர்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
அவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சிவகங்கை சமூக ஆர்வலர் ராஜாராமன் கூறுகையில், புதிய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
அதேபோல், ஜல்ஜீவன் திட்டத்திலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன. பல இடங்களில் குழாய்கள் முறையாக பதிக்கவில்லை. இணைப்பு கொடுத்த கிராமங்களிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுடன் இணைப்பு கொடுக்கவில்லை. பல இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் விஜய் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, தண்ணீர் விநியோகிக்க தடையாக உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதோடு ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், ஜல்ஜீவன் திட்டத்தில் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. நிதி ஒதுக்கீடு வராததால் ஒப்பந்ததாரர்கள் முடித்த பணிகளுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர்களும் பணியை முடிக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படியே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது, என்றனர்.