அருண்ராஜ்
சென்னை: “ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தவறு. திருவள்ளுவருக்கு காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல” என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். லோக் பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு.
திருவள்ளுவர் எந்தவொரு மதம், சாதி, இனம், நாட்டிற்குள்ளும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.
அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது. வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவத்தை தான்.
வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்கப் படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.