நாதக பொதுக் குழு கூட்டத்தில் சீமான்.

 
தமிழகம்

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

வெற்றி மயிலோன்

சென்னை: “எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “நாம் தமிழர் கட்சியின் வெற்றிதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும். மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற மண்ணில் ஆட்சி அதிகாரம்தான் எல்லா மாற்றத்துக்கும் அடிப்படையாக இருக்கும்.

இங்கே நம்முடைய மொழியை பேசி, நம் வாழ்க்கையை வாழ்ந்து, நம்மால் ஆட்சிக்கு வந்து, நம் மொழியை, வரலாற்றை, இனத்தை அழிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். தமிழினத்தில் அவ்வப்போது எழும் எழுச்சியை திராவிடர்கள் தன் ஆட்சி அதிகாரத்தால் அடக்கிவிட்டார்கள்.

மக்களிடம் உள்ள வறுமையின் காரணமாக ஏற்பட்ட அறியாமை, மறதியை பயன்படுத்தி அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். தேர்தலில் இந்தக் கட்சிகள் பெறுவது எல்லாம் வெற்றியா? நான் இந்த மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறேன். எனவே வெற்றியோ, தோல்வியோ அது அவர்கள் தரும் பரிசு. எங்களைப்போல தனித்து நின்று, தத்துவம் பேசி வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம். பெரிய கட்சி என்கிறார்கள்... ஆனால், மாநாட்டுக்கு, கூட்டத்துக்கு சாப்பாடு, சாராயம், காசு கொடுத்துதான் ஆள் சேர்க்கிறார்கள்.

நாங்கள் வெற்றிபெற்று விடுவோம் என எதிரிகள் பயப்படுகிறார்கள். இங்கே இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே. எல்லாமே பெரியார்தான் காரணம் என்கிறது ஒரு கூட்டம். உண்மையில்தான் இந்த நாட்டை திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், எங்கள் மொழி, கலை, இலக்கிய, பண்பாடு, வழிபாடு, நிலம், வளம், ஆட்சி, அதிகாரம் எல்லாம் சிதைந்து அழிந்து போனதற்கு காரணம் பெரியார்தான். அந்த திராவிட திருட்டு சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையேதான் இங்கே போட்டியே. இங்கே இந்திய திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேதான் போட்டி.

தனித்து நின்று, தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு சின்னம் பெற்று, எளிய பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்தி அங்கீகாரம் பெற்ற கட்சி, நாட்டில் எங்களைத் தவிர வேறேதும் உண்டா?

வாக்குக்கு காசு கொடுப்போம் என்ற கூட்டத்தை ஆதரிப்பீர்களா அல்லது மக்களுக்கு வாழ்க்கையை கொடுப்போம் என்பவர்களை ஆதரிப்பீர்களா?

இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல... அது வீழ்ச்சித் திட்டம். இலவசம் பெறும் ஏழ்மை நிலை இல்லாது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். நல்ல கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கினால் மக்களே தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள்.

நிலமும் வளமும் சார்ந்த தற்சார்பு தாய்மை பொருளாதாரத்தை உருவாக்குவோம். சாராயப் பொருளாதாரம் மூலம் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடி, கால்நடை வளர்ப்பு மூலம் பொருளாதாரம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி. எது வேண்டும் மக்களே?

பின்லாந்தை விஞ்சிய கல்வியை தமிழகத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம். இதனை நிச்சயம் சாத்தியப்படுத்திக் காட்டுவேன்.

நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் ஒருபக்கம், நாங்கள் தமிழர்கள் என்பவர்கள் ஒருபக்கம். எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். எங்கள் இனத்தில் எண்ணற்ற பெரியார்கள் உள்ளனர். திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும். சாதி, மதத்தை பார்ப்பவர்கள் ஒருபக்கம் நிற்கட்டும். மனிதமே புனிதம் என்பவர்கள் என்பக்கம் நிற்கட்டும்.

ஏற்காட்டில் சாலைக்கு தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற தமிழின வள்ளல் பெயரை அழித்து பெரியார் பெயரை வைத்தது ஏன்?

தமிழுக்காக, தமிழருக்காக பாடியதால்தான் திராவிடர்கள் பாரதியையும், பாரதிதாசனையும் போற்ற மறுக்கிறார்கள்.

மக்கள் சரியில்லை என நாம் சொல்லக் கூடாது. சரியில்லை என்பதை சரி செய்ய வேண்டியதே நம் வேலை. பிழை யாருடையதாக இருந்தாலும் நாம் திருத்துபவனாக இருக்க வேண்டும்.

நாட்டில் எல்லோருக்கும் சமமான தரமான கல்வி, தரமான மருத்துவம். அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்தவர்களுக்கே அரசு வேலை என சட்டம் போடுவோம்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். அவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என சட்டம் போடுவோம்.

திருப்பரங்குன்றம் பிரச்சினையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். வாக்குக்காக அந்த பிரச்சினையை மாற்றுகிறார்கள். சாதி, மதம் முக்கியம் என்பார்கள் அவர்கள். நாங்கள் மனிதம் பெரிது என்கிறோம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பதாக சொல்கிறார்கள். உடைத்து சூறையாடப்படும் குன்றுகளுக்காக அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்” என்று சீமான் பேசினார்.

SCROLL FOR NEXT