

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது
படங்கள்: எல். சீனிவாசன்
சென்னை: திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ‘சமவேலைக்கு சமஊதியம்’ வழங்கக்கோரி சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று (டிச., 27) கைது செய்யப்பட்டனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009-ல் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது. ஊதிய முரண்பாட்டை கண்டித்து சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
தூய்மைப்பணியாளர்கள்
இந்நிலையில், நேற்று (டிச.26) காலை 10.30 மணிக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக ‘சமவேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி இன்று (டிச., 27) சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: மேலும், திமுக அரசுக்கு எதிரான போரட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை பாரிமுனையில் தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.