இதுவரை தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி இந்தியில் மட்டுமே பேசிவந்தார். ஆனால், கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற விழாவில் அவர் முதல் முறையாக ஆங்கிலத்தில் பேசினார். அவரை ஆங்கிலத்தில் பேசவைத்தது திராவிட மாடல் ஆட்சி” என துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், இலஞ்சியில் திமுக சார்பு அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில், திமுக-வின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த உடனேயே அவசர அவசரமாக பட்ஜெட்டை பாராட்டி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அந்த அளவுக்கு அவர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் முரட்டு அடிமையாக உள்ளார். இதுவரை தமிழகத்துக்கு வருகை தந்த மோடி இந்தியில் மட்டுமே பேசி வந்தார்.
ஆனால் கடந்த வாரம், மதுரையில் நடைபெற்ற விழாவில் அவர் முதல் முறையாக ஆங்கிலத்தில் பேசினார். அவரை ஆங்கிலத்தில் பேச வைத்தது திராவிட மாடல் ஆட்சி. மோடி பங்கேற்ற விழா மேடையின் முகப்பில் தந்தை பெரியார் படம் வைக்கப்பட்டிருந்தது.
அதை அவசர அவசரமாக அகற்ற பாஜக-வினர் சொன்னதைக் கேட்டு பெரியார் படத்தை அகற்றிவிட்டு, மோடியின் படத்தை அதிமுக-வினர் வைத்தனர். இதிலிருந்து, எந்த அளவுக்கு முரட்டுத்தனமான அடிமையாக பழனிசாமி உள்ளார் என்பதை தெரிந்துகொள்ளலாம். அதிமுக என்பதை, ‘அமித் ஷா திராவிட முன்னேற்றக் கழகம்’ என மாற்றக்கூட பழனிசாமி தயங்க மாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.