கள நிலவரத்தை அறிந்து கொள்ள 57 தொகுதிகளில் வெளிமாநிலப் பொறுப்பாளர்களை களமிறக்கும் பாஜக

கள நிலவரத்தை அறிந்து கொள்ள 57 தொகுதிகளில் வெளிமாநிலப் பொறுப்பாளர்களை களமிறக்கும் பாஜக
Updated on
1 min read

தேர்தல் பணிக்காக 57 தொகுதிகளில் வெளிமாநிலப் பொறுப்பாளர்களை களமிறக்குகிறது பாஜக. இவர்கள் வாக்குச்சாவடி வாரியாக பாஜக அணிக்கு நிலவும் சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்து, உடனுக்குடன் தலைமைக்கு தகவல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக தனது தேர்தல் வியூகத்தை மிகவும் நுணுக்கமாகவும், வேகமாகவும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இம்முறை கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன், பாஜக மேலிடம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இதற்காக வெளிமாநிலங்களைச் சேர்ந்த 57 முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பணிகளைப் பார்வையிடவும், களப்பணிகளை முடுக்கிவிடவும் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வெளிமாநில நிர்வாகிகளுக்குக் பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பாஜக-வுக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள 75 தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த 75-ல், மிகவும் சாதகமான சூழல் நிலவும் 57 தொகுதிகளைத் தேர்வு செய்து, அங்கு இந்த வெளிமாநிலப் பொறுப்பாளர்கள் தேர்தல் முடியும் வரை முகாமிட்டுப் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ள தொகுதிகளை அதிமுக-விடம் தங்களுக்கு கேட்டுப் பெறுவதற்கான திட்டத்தையும் பாஜக வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 'பூத் கமிட்டி' உறுப்பினர்களுடன் கலந்துரையாடுதல் மற்றும் கமிட்டி இல்லாத இடங்களில் புதிய அமைப்புகளை உருவாக்குதல். வாக்குச்சாவடி வாரியாக நிலவும் சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்து, உடனுக்குடன் கட்சி மேலிடத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தல்.

தொகுதியின் நிலவரத்தைப் பொறுத்து, மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள வேட்பாளர்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளில் வெளிமாநில பொறுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், “ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் தீவிரமாக முடிக்க வேண்டும். ஏப்ரல் 15-க்குப் பிறகு அவர்கள் மற்ற வேலைகளைப் பார்க்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். இவரின் கூற்றை வைத்துப் பார்க்கையில், ஏப்ரல் 15-ம் தேதிக்குள் தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடுமோ என்ற எதிர்பார்ப்பு பாஜக வட்டாரத்தில் நிலவுகிறது.

கள நிலவரத்தை அறிந்து கொள்ள 57 தொகுதிகளில் வெளிமாநிலப் பொறுப்பாளர்களை களமிறக்கும் பாஜக
தேர்தல் தேதி அறிவிக்கட்டும்... சுதந்திரமாக சூறாவளி பிரச்சாரத்துக்குத் தயாராகும் விஜய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in