கிருஷ்ணசாமி

 
தமிழகம்

“பழனிசாமிக்கு பாடம் புகட்டவே தேர்தலில் போட்டி” - கிருஷ்ணசாமி ஆவேசம்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: “அதிமுக பொதுச் செயலர் பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது” என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியது: “தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின்படி, புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் 61 வேட்பாளர்களில் 57 பேருக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

          

கடையநல்லூர், கீழ்வேளூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் வாளி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 90 லட்சம் பேர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் ஆதரவோடு புதிய தமிழகம் கட்சி களம் காண்கிறது. எந்த தேர்தலையும் புறக்கணிக்காமல், புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து களம் கண்டு வருகிறது. தனித்து போட்டியிடுவது புதிய தமிழகம் கட்சிக்கு புதிது அல்ல.

இன்றைய அரசியலில், கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி திமுக வெற்றிக்கு பழனிசாமி வழிவகுத்தார். இந்த தேர்தலில் எங்களோடு 2 முறை பேச்சுவார்த்தை நடத்தி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவீர்கள் என எழுதி வாங்கிய பின்னரும், எங்களது கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக பழனிசாமி அறிவித்துவிட்டார். அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

புதிய தமிழகம் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு எங்களது ஆதரவு கிடையாது. அந்த தொகுதிகளில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரும் வாக்களிக்க மாட்டார்கள். இந்த தேர்தலை, பட்டியல் வெளியேற்றத்திற்கான வாக்கெடுப்பாக கருதி சந்திக்கிறோம். புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் இடங்களில் எங்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது .

புதிய தமிழகம் கட்சி தனது சொந்த பலத்துடன், தனித்துவத்தையும் சுயமரியாதையையும் காக்கும் நோக்கில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் வளர கூடாது என்ற நோக்கில் அதிமுக செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய தங்களுக்கு இப்போதுள்ள அதிமுகவுடனான பேச்சுவார்த்தை எப்படி தோன்றுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஜெயலலிதாவையும் பழனிசாமியையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்” என தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து திமுகக்கு சாதகமாக அமையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நாங்கள் யார் வாக்கையும் பிரிக்கவில்லை. தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குகளை ஒற்றுமையாக்குகிறோம்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT